பக்கம் எண் :

முதற் காண்டம்95

     தறை - 'தரை' என்ற சொல்லின் கடைப் போலி. 'தடமலி நகரே'
என்பதனை, 'நகர் மலி தடமே' என மாற்றிப் பொருள் கொள்க.
  
                    58
அலையினோ டிகல்வன வரிதொலி நியமம்
விலையினோ டிகல்வன விரியணி மணிகள்
கலையினோ டிகல்வன கடையில நயமோர்
வலையினோ டிகல்வன மலிதிரு நகரம்.
 
அலையினோடு இகல்வன அரிது ஒலி நியமம்.
விலையினோடு இகல்வன விரி அணி மணிகள்.
கலையினோடு இகல்வன கடை இல நயம். ஓர்
வலையினோடு இகல்வன மலி திரு நகரம்.

     அரிதான ஒலிக் கலப்புள்ள கடை வீதிகள் கடல் ஒலியோடு
மாறுபடுவன. பரந்து கிடக்கும் அணிகளும் மணிகளும் விலையோடு
மாறுபடுவன. எல்லை இல்லாத இன்பங்கள் கலையினோடு மாறுபடுவன.
நகரத்தில் மலிந்து கிடக்கும் செல்வங்கள் வலையோடு மாறுபடுவன.

     மாறுபடுதலாவது, அவ்வவற்றின் மேம்படுதல் என்று கொள்க.
கலையின் வகை தொகையும், வலையில் அகப்படும் பொருள் வகையும்
கருதி உவமை கொள்ளப்பட்டன.

     மலி திரு நகரம் - 'நகரம் மலி திரு' என மாற்றுக.
  
                   59
வளையொலி வளைவுடை வயிரொலி வளர்பாக்
கிளையொலி யிசையொலி குழலொலி கிளர்பற்
றுளையொலி கலமொலி துறுவலொ டினிதாய்
விளையொலி யலையொலி மெலிதர மிகுமால்.
 
வளை ஒலி, வளைவு உடை வயில் ஒலி, வளர் பா,
கிளை ஒலி, இசை ஒலி, குழல் ஒலி, கிளர் பல்
துளை ஒலி, கலம் ஒலி துறுவலொடு இனிதாய்
விளை ஒலி அலை ஒலி மெலிதர மிகும் ஆல்.

     சங்கின் ஒலியும், வளைவு கொண்ட ஊது கொம்பின் ஒலியும்,
பலவகையாக வளரும் பாக்களுக்குரிய பண் ஒலியும், பாடல் இசை ஒலியும்,
குழலின் ஒலியும், கிளர்ந்து எழும் பல துளைக் கருவிகளின் ஒலியும், யாழின்
ஒலியும் ஒன்றாகச் சேர்வதனால் இனிதாய் உண்டாகும் ஒலி கடலொலியும்
மெலிய மேலோங்கி நிற்கும்.