பக்கம் எண் :

முதற் காண்டம்96

                 60
கொடியொடு குடையுற விறையவர் குழுவி
னடியொடு மடியுற விரிவன வனிகம்
பொடியொடு மிருளுற நெரிவன பொருடேர்
முடியொடு முகிலுற முயல்வன நகரம்.
 
கொடியொடு குடை உற, இறையவர் குழுவின்
அடியொடு அடி உற, விரிவன அனிகம்
பொடியொடும் இருள் உற, நெரிவன பொருள் தேர்
முடியொடு முகில் உற முயல்வன நகரம்.

     கொடிகளோடு குடைகள் நெருங்குவதாலும், அரசர் கூட்டத்தின்
அடிகளோடு அடிகள் நெருங்குவதாலும், விரிந்து செல்லும் படைகள்
கிளப்பும் தூசியோடு இருள் பரவுவதாலும், நெருங்கிச் செல்லும்
பொன்னாலாகிய தேர்களின் உச்சியோடு மேகங்கள் பொருந்துவதனாலும்
அந்நகரத்து இடையறாது முயற்சிகள் நடந்த வண்ணம் இருக்கும்.
அனிகம் - அநீகம் என்ற வட சொல் படைத் தொகுப்பைக் குறிக்கும்.

                  வாழ்க்கை வளம்

     - மாங்கனி, - மாங்கனி, - மாங்கனி, - மா

                    61
கோடாதன வுயர்கோலொடு குளிர்மாறில குடையும்
வாடாதன தனிவாகையு மதமாறில களிறு
மோடாதன வடறானையு முளகோனொடு நகரம்
வீடாதன நெறிமாணுறி, மெலியாநல முளதால்.
 
கோடாதன உயர் கோலொடு குளிர் மாறு இல குடையும்,
வாடாதன தனி வாகையும், மதம் மாறு இல களிறும்,
ஓடாதன அடல் தானையும் உள கோனொடு, நகரம்
வீடாதன நெறி மாண் உறி, மெலியா நலம் உளது ஆல்.

     வளையாத உயர்வுள்ள செங்கோலோடு குளிர்ச்சி மாறுதல் இல்லாத
வெண் கொற்றக் குடையும், வாடாத ஒப்பற்ற வெற்றியும், மதம் மாறாத
யானைப்படையும், பின் வாங்காத வலிமை வாய்ந்த சேனையும் கொண்டுள்ள
மன்னனோடு, என்றும் விடாத அறநெறியால் மாண்புற்று எருசலே மாநகரம்
கெடாத நலங் கொண்டு விளங்கியது.