பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்102

                    141
வினையொன்று மின்றி வினைசெய்து செய்த வினைதன்னி
                                லொன்றும் விழையாய்
நினைவொன்று மின்றி மறவொன்று மின்றி நிகிலந்தெ
                                ரிந்தநிலவாய்
முனைவொன்று மின்றி முனிவாய்மு னிந்து முதிர்கின்ற வன்பு
                                முயல்வா
யனையொன்று மின்றி யுயர்வோயி யாரு னருவீர வாண்மை
                                யறிவார்.
 
"வினை ஒன்றும் இன்றி, வினை செய்து, செய்த வினை தன்னில்
                                      ஒன்றும் விழையாய்;
நினைவு ஒன்றும் இன்றி, மறவு ஒன்றும் இன்றி நிகிலம் தெரிந்த
                                      நிலவு ஆய்,
முனைவு ஒன்றும் இன்றி முனிவாய்; முனிந்தும் முதிர்கின்ற அன்பு
                                      முயல்வாய்;
அனை ஒன்றும் இன்றி உயர்வோய், யார் உன் அரு வீர ஆண்மை
                                      அறிவார்?"

     "வினைக்கு உரிய முயற்சி ஒரு சிறிதும் இல்லாமல், படைத்தல் காத்தல்
அழித்தல் என்னும் வினைகளை நீயே செய்து, செய்த அவ்வினையினின்று
உனக்கென ஒரு பயனும் விரும்ப மாட்டாய்; நினைவு கூர்தலென்ற ஒன்றும்
இல்லாமல், மறதிக்கு ஆளாதல் என்ற ஒன்றும் இல்லாமல், எல்லாம் தெரிந்த
ஒளியாய் விளங்கி, வெறுப்புக்கு இடம் ஒன்றும் இன்றிச் சினம் காட்டுவாய்;
அவ்வாறு சினந்த காலத்தும் முதிர்கின்ற அன்பில் ஈடுபடுவாய்; ஒப்புமை
ஒன்றும் இன்றி உயர்ந்து நிற்பவனே, உன் அரிய வீரத்தோடு கூடிய
வல்லமையை யார் உள்ளவாறு அறிவார்?"

     முத்தொழில் செய்தலால் ஆண்டவனுக்கு முன் இல்லாத
பெருமையும் பயனும் புதிதாக வருதல் இல்லையாதலின், 'வினை தன்னில்
ஒன்றும் விழையாய்" எனவும், முக்காலமும் ஒரு காலமாய் எல்லாம்
தெரிந்த இறைவனுக்கு மறத்தலும் நினைவு கூர்தலும் இல்லை எனவும்,
விருப்பு வெறுப்பற்றவன் இறைவனாதலின், 'முனைவு ஒன்றும் இன்றி
முனிவாய், முனிந்தும் முதிர்கின்ற அன்பு முயல்வாய்' எனவும் கூறினார்.

             இளவன் மாட்சிப் படலம் முற்றும்

            ஆகப் படலம் 14க்குப் பாடல்கள் 1405