நீர் ஒளித்த
சுடர் எழுமுன், நின்று எழுந்த நிறை நீரார்,
பார் ஒளித்த நாதன் அடி பணிந்து ஏந்தி, துயர்க்கு எஞ்சா,
கார் ஒளித்த மின்கள் எனக் கடுகிப் போய், நெடு நெறியின்
சூர் ஒளித்த வானவர் தீம் சொல் ஆட ஏகினரே. |
கடல் நீருள்
மறைந்த ஞாயிறு உதிப்பதற்கு முன், துயில் விட்டு
எழுந்த நிறை குணத்தவராகிய சூசையும் மரியாளும், இவ்வுலகில் மனித
உருவத்துள் தன்னை மறைத்து நின்ற குழந்தை நாதனின் அடிபணிந்து
ஏந்தி எடுத்துக்கொண்டு, எத்துயருக்கும் பின்வாங்காமல், கருமேகத்துள்
மறைந்திருந்த மின்னல்கள் போல் விரைந்துபோய், துன்பங்களை
மறைக்கும் தன்மையாய் வானவர் இனிதாய்ப் பேசி வர, நெடும் வழியில்
சென்று கொண்டிருந்தனர்.
நடந்த விரைவுக்கு
மின்னலையும், தம் பெருமையை எளிமைக்
கோலத்தில் மறைத்துச் சென்ற தன்மைக்குக் கார் ஒளித்த மின்னலையும்
தனித்தனியே உவமையாகக் கொள்க. சொல்லாடல்-பேசுதல்.
3 |
முளைத் தெழுந்த
முழுமதிபோ லரசன்ன முதிர்தூவி
வளைத் தெழுந்த குடை விரிப்ப வானுச்சி செஞ்சுடரோன்
றிளைத் தெழுந்த கதிர்வீசித் தேன்றுளித்த பூஞ்சினைகள்
விளைத் தெழுந்த மலர்ச் சோலை மிடைந்தடைந்தார்
வினைவென்றார் |
|
முளைத்து எழுந்த
முழு மதி போல் அரச அன்னம் முதிர் தூவி
வளைத்து எழுந்த குடை விரிப்ப, வான் உச்சி செஞ்சுடரோன்
திளைத்து எழுந்த கதிர் வீசி, தேன் துளித்த பூஞ்சினைகள்
விளைத்து எழுந்த மலர்ச் சோலை மிடைந்து அடைந்தார், வினை வென்றார். |
தீவினையை வென்றவராகிய
இம்மூவரும், உதித்து எழுந்த
நிறைமதிபோல் அரச அன்னம் தன் முதிர்ந்த இறகை வளைத்து
உயரத்தில் நின்ற குடைபோல் விரித்துப் பறந்துவர, கதிரவன் வானத்து
உச்சியில் திரண்டு எழுந்த கதிர்களை வீசி நிற்கும் வேளையில், தேனைப்
பொழிந்த அழகிய கிளைகள் நிழலை விளைவித்த வண்ணமாய் எழுந்து
நின்ற ஒரு மலர்ச் சோலையை நெருங்கிச் சேர்ந்தனர்.
|