பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்115

"ஆர்த்தார் திரண்டார் முடுகுகின்றார் அன்றே ஏழாம் முறை வர, கார்
ஈர்த்து ஆர் உரும் ஒத்து ஒலித்து அதிர இடை விட்டு அரணும்
                                        தகர்ந்து இடிந்த
பார்த்தார் ஒன்னார் பதைத்து அஞ்சப் பாய்ந்தார் யூதர் வாள் பசியைத்
தீர்த்தார் துமித்தார் பகை வெள்ளம் சிறந்த வெற்றி நலம் கொண்டார்.


     "யூதர் முழங்கித் திரண்டு முடுகுகின்றவராய் அன்று ஏழாம் முறை
நகரைக் சூழ்ந்து வரவே, கருமேகத்தை இழுத்தெறிந்த தன்மையாய்
முழங்கும் இடி போல் ஒலித்து அதிர்ந்து அம்மதில் இடைவிட்டு உடைந்து
இடிந்து விழுந்தது. அதனைப் பார்த்த பகைவர் பதைத்து அஞ்சுமாறு
யூதர் இடைவெளி வழியாக உள்ளே பாய்ந்தனர்; பகை வெள்ளத்தை
வெட்டி வீழ்த்தித் தம் வாளின் பசியைத் தீர்த்துக் கொண்டனர், சிறந்த
வெற்றியாகிய நலத்தை அடைந்தனர்.

                    காபனர்க்கு அடைக்கலம்

     - மாங்கனி, கூவிளம், கூவிளங்காய்

            19
பொருவற்றவி தத்துயர் பொற்புநகர்
செருவற்றதி றத்திற கர்ந்ததெனா
வெருவுற்றவி யப்பிலொ ருங்கெவருந்
தருவுற்றபி ரானடி தாழ்ந்தனரே.
 
"பொருவு அற்ற விதத்து உயர் பொற்பு நகர்,
செரு அற்ற திறத்தில் தகர்ந்தது எனா,
வெரு உற்ற வியப்பில், ஒருங்கு எவரும்
தரு உற்ற பிரான் அடி தாழ்ந்தனரே.


     "ஒப்பற்ற விதமாய் உயர்ந்து நின்ற அழகிய எரிக்கோ நகரம்,
போரும் அற்ற விதமாய் உடைந்து விழுந்ததென்று கண்டு அச்சம் கலந்த
வியப்பினால், அதனை நிறைவேற்றுத் தந்த ஆண்டவன் திருவடியை
அனைவரும் ஒருங்கே பணிந்தனர்.