20 |
விண்காவல
னார்மிட லஞ்சினராய்
மண்காவல்வ ழங்கிய சோசுவன்வாய்த்
தண்காவில டைக்கல மேதரவென்
றொண்காபன நாடரொ டுங்கினரால். |
|
"விண் காவலன்
ஆர் மிடல் அஞ்சினராய்,
மண் காவல் வழங்கிய சோசுவன் வாய்,
தண் காவில், அடைக்கலமே தர என்று,
ஒண் காபன நாடர், ஒடுங்கினர் ஆல். |
"ஒளியுள்ள காபன
நாட்டார், விண்ணுலகுக்குக் காவலனாகிய ஆண்டவனின் நிறைந்த வல்லமைக்கு அஞ்சினவராய்,
மண்ணுலகிற்கு ஆட்சிக் காவலை வழங்கி நின்ற சோசுவனிடம் தமக்கு அடைக்கலம் தருமாறு
வேண்டி, அவன் தங்கியிருந்த குளிர்ந்த சோலையில் வந்து பணிந்தனர்.
'ஆல்' அசைநிலை.
21 |
பாரஞ்சின
வஞ்சின பாரினொடு
நீரஞ்சினிர் நித்தன டைக்கலம்வந்
தீரஞ்சிலி ரஞ்சிலி ரென்றனனால்
போரஞ்சில கைப்புக ழெஞ்சிலனே. |
|
"பார் அஞ்சின
அஞ்சின பாரினொடு
நீர் அஞ்சினிர் நித்தன் அடைக்கலம் வந் -
தீர். அஞ்சிலிர், அஞ்சிலிர்!' என்றனன் ஆல்,
போர் அஞ்சில கைப் புகழ் எஞ்சிலனே. |
"போருக்கு அஞ்சாதவனும்
தன் கை வன்மையின் புகழ்
குறைபடாதவனுமாகிய சோசுவன், அக்காபனரை நோக்கி, 'இந்த வெற்றியைக்
கண்டு உலகமெல்லாம் அஞ்சின. அவ்வாறு அஞ்சிய உலகத்தோடு சேர்ந்து
நீங்களும் அஞ்சினீர்கள்; அத்துடன் நில்லாமல், என்றும் இருப்பவனாகிய
ஆண்டவன்பால் அடைக்கலமென்று வந்தீர்கள்; எனவே, அஞ்சாதீர்கள்,
அஞ்சாதீர்கள்!" என்றான்.
'அஞ்சலிர்'
என்ன வேண்டியது, எதுகை இன்னோசைப் பொருட்டு,
'அஞ்சிலிர்' என நின்றது. 'ஆல்' இடையே அசை நிலை.
|