பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்117

            22
எஞ்சாவுற வாயின ரென்றுளமற்
றஞ்சாமற மார்பல நாடரெலா
நஞ்சாடிய நாணிவில் வவ்வியறா
நெஞ்சாடிக லாடநி னைந்தனரால்.
 
"எஞ்சா உறவு ஆயினர் என்று, உள மற்று
அஞ்சா மறம் ஆர் பல நாடர் எலாம்,
நஞ்சு ஆடிய நாணி வில் வவ்வி, அறா
நெஞ்சு ஆடு இகல் ஆட நினைந்தனர் ஆல்.

     "இவ்வாறு காபனர் யூதரோடு குறையற்ற உறவு பூண்டனர் என்று
அறிந்து, மற்றுள்ள அஞ்சாத வீரம் நிறைந்த பல நாட்டவர் யாவரும்,
நஞ்சு தோய்ந்த நாண் பூட்டிய வில்லை எடுத்துக் கொண்டு, பகை ஆறாத
தம் நெஞ்சு தூண்டியவாறு காபனரோடு போராட நினைத்தனர்.

     'ஆல்' அசை நிலை.

           23
வேறாயுரை யும்முறை யுள்விதமும்
வேறாய்முறை யும்விதி யுங்குலமும்
வேறாயிறை யும்விழை யும்மறையும்
வேறாயுற வாடவி ரும்புதலென்.
 
"வேறாய் உரையும் உறையுள் விதமும்,
வேறாய் முறையும் விதியும் குலமும்,
வேறாய் இறையும், விறையும் மறையும்
வேறு ஆய், உறவாட விரும்புதல் என்! "

     "பேசும் மொழியும் உறைவிட அமைப்பு விதமும் வேறாகவும்,
நடக்கும் பாவனையும் சட்ட விதியும் குலமும் வேறாகவும், இறையும்
வேறாகவும், விரும்பும் வேதமும் அவ்யூதருக்கு வேறாக
அமைந்திருக்கையில், இக்காபனர் அவரோடு உறவாட விரும்புதல்
ஏனோ!'

     இவ்வாறு, காபனர் யூதரோடு கொண்டுள்ள உறவைக் குறித்துப் பிற
நாட்டினர் நினைந்து சினந்தனர் என்று விரித்துக் கொள்க.