பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்118

              24
பகையார்க்குற வோர்பகை யாரெனலுந்
தகையார்க்குள தம்முறை யாமெனவே
நகையார்க்கந கைத்துந டுங்கியவவ்
வகையார்க்கிகல் செய்திட வந்தனரே.
 
"பகையார்க்கு உறவோர் பகையார் எனலும்,
நகையார்க்கு உள தம் முறை ஆம்' எனவே,
நகை ஆர்க்க நகைத்து, நடுங்கிய அவ்
வகையார்க்கு இகல் செய்திட வந்தனரே.

     "தம் பகைவருக்கு உறவாய் உள்ளவர் தமக்குப் பகைவர் என்று
கொள்ளுதலும் தகுதியுடையோர்க்குத் தாம் செய்யத் தக்க முறையாய்
அமையும்" என்று கொண்டு, சினச் சிரிப்பு முழங்க அக்காபனரை இகழ்ந்து,
நடுங்கி அடைக்கலம் தேடிய அவ்வகையாருக்கு எதிராக அப்பிறநாட்டார்
போர் செய்ய வந்தனர்.

              25
வஞ்சித்துயி ருண்ணயில் வவ்வினர்போர்
விஞ்சித்திர ளாகமி டைந்தனரென்
றஞ்சித்திரி காபனர் வந்தலறி
யெஞ்சித்தொழு தி,ற்றையி யம்பினரால்.
 
"வஞ்சித்து உயிர் உண் அயில் வவ்வினர், போர்
விஞ்சித் திரளாக மிடைந்தனர் என்று,
அஞ்சித் திரி காபனர் வந்து அலறி,
எஞ்சித் தொழுது, இற்றை இயம்பினர் ஆல் :

     "தம்மை வஞ்சித்துத் தம் உயிரை உண்ணக்கூடிய வேலை ஏந்தி
வந்த அப்பகைவர், போரில் தம்மை மிஞ்சத்தக்க பெருந்திரளாக வந்து
கூடினரென்று கண்டு, அவருக்கு அஞ்சி அலைந்து திரிந்த காபனர்
சோசுவன்பால் வந்து அலறி, மெலிந்து தொழுது, இதனை எடுத்துக்
கூறினர்.

     'ஆல்' அசைநிலை. தொடர்ந்துவரும் பாடல்களுக்கும் இது
பொருந்தக் கொள்க.