பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்120

            28
விதுவீசிய வில்லில்வெ லற்கரியான்
மதுவீசுமெ ரூசல மண்டிலமா
ளதுனீசத னென்னும டற்பெயரான்
பொதுவீசர்பி ரான்பொர வெய்தினனால்.
 
"விது வீசிய வில்லில் வெலற்கு அரியான்,
மது வீசும் எரூசல மண்டிலம் ஆள்,
அதுனீசதன் என்னும் அடல் பெயரான்,
பொது ஈசர் பிரான், பொர எய்தினன் ஆல்.

     "ஐவர்க்கும் பொதுவில் அரசர்க்கரசனாய் விளங்குபவனும், பிறைச்
சந்திரனை வடிவால் வென்ற வில் வன்மையில் வெல்லுதற்கு அரியவனும்,
தேனைப் பொழியும் எருசலேம் நாட்டை ஆள்பவனுமாகிய அதுனீசதன்
என்னும் வல்லமை வாய்ந்த பெயரை உடையவன் போர் செய்ய
வந்துள்ளான்.

            29
நாவாலடை யாநய னாபிரமாள்
மேவார்பணி வேலெறி கைமிடலோன்
காவாரும தத்தக ளிற்றினுய
ரோவானெனு நாமனு முற்றனனால்.
 
"நாவால் அடையா நயன் ஆபிரம் ஆள்,
மேவார் பணி வேல் எறி கை மிடலோன்,
கா ஆரும் மதத்த களிற்றின் உயர்,
ஓவான் எனும் நாமனும் உற்றனன் ஆல்.

     "நாவால் உரைக்க இயலாத செல்வமுள்ள ஆபிர நாட்டை
ஆள்பவனும், பகைவரைப் பணிவிக்கும் வேலை எறிதலில் கை வன்மை
படைத்தவனும், காட்டிலுள்ள நிறைந்த மத யானை போல்
உயர்ந்தவனுமாகிய ஓவான் என்னும் பெயர் கொண்ட மன்னனும்
வந்துள்ளான்.

           30
ஏராடிய வேரிம நாட்டிறையோன்
பாரானெனு நாமன கல்படியின்
வேராடிய மூவிலை வேலுடனோர்
சீராடிய தேர்மிசை சென்றனனால்.