பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்125

            39
கழற்காலினர் கற்றிர டோளினர்பொன்
னிழற்றாரினர் போர்பல நீந்தினரே
றழற்கோலினர் கூற்றது தோழரலைச்
சுழற்காரிணை துன்றப யர்திரளே.
 
"கழல் காலினர், கல்திரள் தோளினர், பொன்
நிழல் தாரினர், போர் பல நீந்தினர், ஏறு
அழல் கோலினர், கூற்றது தோழர், அலைச்
சுழல் கார் இணை துன்று அபயர் திரளே.

     "அலைகளைச் சுழற்றும் கடலுக்கு ஒப்பாக நெருங்கித் திரண்ட வீரர்,
வீரக்கழல் அணிந்த கால்களையும், மலை போல் திரண்ட தோள்களையும்
உடையவர்; பொன்னால் செய்த ஒளியுள்ள மாலைகளை அணிந்தவர்; பல
போர்களில் நீந்தி வெற்றிகண்டவர்; இடிபோல் நெருப்பைக் கக்கும்
அம்புகளை உடையவர்; கூற்றுவனின் தோழர் என்னத்தக்கவர்.

             40
கோற்பேர்படை தேர்க்கொடி மாபடைமால்
தோழர்ழற்பேர்படை யோர்தொகை யின்றிவருங்
காற்பேர்படை மாகட லக்கடைபோய்
வேற்பேர்படை யோயெவர் வெல்வரென்றார்.
 
"கோல் பேர் படை, தேர்க் கொடி மா படை, மால்
தோல் பேர் படை, ஓர் தொகை இன்றி வரும்
கால் பேர் படை மா கடல்! அக் கடை போய்,
வேல் பேர் படை யோய், எவர் வெல்வர்?" என்றார்.

     "வேலைத் தாங்கிய பெரும் படை உடையவனே, குதிரையின் பெரும்
படையும், கொடி கட்டிய தேரின் பெரும்படையும், மத மயக்கங் கொண்ட
யானையின் பெரும் படையும், ஒரு தொகை என்பதற்கு அடங்காமல் வரும்
காலாள் பெரும் படையுமாக அப்பகைவர் படை ஒரு பெருங்கடல்!
அவ்விடத்துப் போய் அவரை வெல்லக்கூடியவர் யார்?' என்றனர்
அக்காபனர்.

     கோல் - குதிரைச் சம்மட்டி; ஆகுபெயராய்க் குதிரையை உணர்த்திற்று.