பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்132

     "'வேற்றுமை பாராட்டாமல், அக்காபனரும் நீரும் விரும்பி
ஒன்றாகிய போதே, எமக்கு அவர் பகைவர்', என்று அம்மன்னர் கூறவே,
கூற்றுவன் அல்லாது வேறு எவரும் தனக்கு ஒப்பாதல் இல்லாத வேலைத்
தாங்கிய அவ்வாபன், திரும்பவும் கூறுவான்; 'உம் படையின் வெள்ளத்தைப்
பெரிதாக மதிப்பதனால், மனத்தில் பாதுகாப்பு உணர்வு பொங்கி மயங்குதல்
வேண்டாம்.


                   51
பிரம்பினா லெசித்து நாட்டிற் பெருந்துயர் விளைந்த வாறுங்
கரம்பினா ரடியே காணக் கடற்றிரை பிரிந்த வாறும்
வரம்பிரா தெழுந்திந் நாட்டில் வரும்புனல் நின்ற வாறும்
பரம்பிரான் வலியைக் காட்டும் பலவையுங் கேளீர் கொல்லோ.
 
"'பிரம்பினால் எசித்து நாட்டில் பெருந்துயர் விளைந்த ஆறும்,
கரம்பின் ஆர் அடியே காணக் கடல் திரை பிரிந்த ஆறும்,
வரம்பு இராது எழுந்து இந் நாட்டில் வரும் புனல் நின்ற ஆறும்,
பரம் பிரான் வலியைக் காட்டும் பலவையும் கேளீர் கொல்லோ?

     "மோயிசன் கையிலிருந்த பிரம்பினால் எசித்து நாட்டில்
பெருந்துன்பம் விளைந்த விதமும், தரிசு நிலம் போல் அரிய தன்
அடிப்பகுதி தோன்றுமாறு செங்கடல் திரைகள் பிரிந்து நின்ற விதமும்,
கரைக்கு அடங்காமல் பொங்கி எழுந்து இந்நாட்டில் பாய்ந்து வரும்
சோர்தான் ஆறு ஓடாது நின்ற விதமும், பரம்பொருளாகிய
ஆண்டவனின் வல்லமை காட்டும் வேறு பலவற்றையும் நீர்
கேள்விப்பட்டதில்லையோ?

     கேளீர்கொல்லோ - கேளீரோ : 'கொல்' இடையே அசைநிலை.

                   52
இத்திறத் தனைத்துஞ் செய்த விறைவனம் மிறைவ னாகி
யத்திறத் தடலோ னம்மை யமர்செய வெகுண்ட காலை
கைத்திறத் துடன்ற வெள்வேற் கடற்படை யரண மாமோ
மெய்த்திறத் திறைஞ்சி யன்னான் விரிநிழற் பெறனன் றென்றான்.