பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்133

"இத் திறத்து அனைத்தும் செய்த இறைவன் நம் இறைவன் ஆகி,
அத்திறத்து அடலோன் நம்மை அமர் செய வெகுண்ட காலை,
கைத் திறத்து உடன்ற வெள் வேல் கடல் படை அரணம் ஆமோ?
மெய்த்திறத்து இறைஞ்சி அன்னான் விரி நிழல் பெறல் நன்று'
                                             என்றான்.

     "இவ்வகையாய் அனைத்தும் செய்த ஆண்டவனே நம் அனைவர்க்கும்
ஆண்டவனாய் இருக்கையில், அவ்விதமான வல்லமை கொண்ட அவனே
நம்மோடு போர் செய்யச் சினந்து எழுந்த காலத்து, தன் கைத்திறத்தை
நம்பிச் சினந்த வெள்ளிய வேலைத்தாங்கிய கடல் போன்ற படையும்
பாதுகாப்பு ஆகுமோ? ஆதலால், உண்மை உணர்ந்த திறத்தோடு வணங்கி,
அவனது விரிந்த திருவடி நிழலைச் சரணமாக அடைதலே நல்லது' என்றான்
ஆபன்.

                   53
போற்றிய தேவர் நீக்கிப் புதுப்பட பொருவற் போற்றச்
சாற்றிய தூதோ போதி சடுதியே நீரு நீவீ
ரேற்றிய தெய்வந் தானு மெம்படை யாண்மை நும்மைத்
தூற்றிய பின்னர் வாழ்த்திச் சொற்றுவீ ரென்றா ரன்னார்.
 
"'போற்றிய தேவர் நீக்கி, புதுப்பட ஒருவற் போற்றச்
சாற்றிய தூதோ? போதி சடுதியே! நீரும் நீவீர்
ஏற்றிய தெய்வம் தானும், எம்படை ஆண்மை நும்மைத்
தூற்றிய பின்னர், வாழ்த்திச் சொற்றுவீர்' என்றார் அன்னார்.

     "அவர் ஐவரும், 'யாம் போற்றி வணங்கிய தேவர்களை விலக்கிவிட்டு,
புதிதாக ஒருவனைத் தெய்வமாகப் போற்று மாறு சொல்ல வந்த தூதுவனோ
நீ? விரைவில் அகன்று போய் விடு! எமது படையின் வீரம் உம்மைச்
சிதறடித்த பின்னர், நீரும் நீர் போற்றி வணங்கிய தெய்வமும் சேர்ந்து,
எம்மை வாழ்த்திப் பேசுவீர்கள்' என்று கூறினர்.