பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்137

     "பகைவர் தம் நெஞ்சிற் பொருந்திய கவசத்தோடு, நஞ்சு நிறைந்த
அவர் தம் நெஞ்சும் பிளக்குமாறு யூதர் ஏவிய நஞ்சு தீட்டிய கொடிய
அம்புகள் மொய்த்தன. மழைத் துளியும் குறை படுமாறு மதநீர் விஞ்சிய
யானையும் மடிந்தது. அதன் முதுகில் அமர்ந்திருக்கும் சினமுள்ள
வஞ்சகரும் சேர்ந்து மடிந்தனர்.


              60
அற்றிழி வார்பிரி வாரதிர் வாரிரிவார்
மற்றிகல் வார்மருள் வார்வரை யாமடிவார்
முற்றிய மாதவ மார்முனி மார்முனிவை
யுற்றிரி கோலுயி ருண்டில தொன்றிலையால்.
 
"அற்று இழிவார்; பிரிவார், அதிர்வார், இரிவார்;
மற்று இகல்வார், மருள்வார்; வரையா மடிவார்;
முற்றிய மாதவம் ஆர் முனிமார் முனிவை
உற்று இரி கோல், உயிர் உண்டிலது ஒன்று இலை
                                    ஆல்.

     "சிலர் யானையினின்று உயிரற்று விழுவார்; வேறு சிலர்
யானையினின்று பிரிந்து அதிர்ந்து அலைவார், சிலர் மீண்டும் மாறுபட்டு
நின்று மயங்குவார்; எல்லை இல்லாமல் பலரும் மடிவார்: முதிர்ந்த பெருந்
தவத்தால் நிறைந்த முனிவரின் சினம்போல் யூதர் கையிலிருந்து நீங்கிச்
சென்ற அம்புகளுள், பகைவர் உயிரை உண்ணாதது ஒன்றுமே இல்லை.

              61
தாறொடு தானைகள் சாய்ந்தும டிந்திடவும்
நீறொடு நூறிய வீறுட னீறிடவும்
பாறொடு பற்சிர மீதுப றந்திடவு
மாறொடு மாறுதி ரத்திரை யார்ந்தனவால்
 
"தாறொடு தானைகள் சாய்ந்து மடிந்திடவும்,
நீறொடு நூறிய வீறு உடல் நீறிடவும்,
பாறொடு பல் சிரம் மீது பறந்திடவும்,
ஆறொடு மாறு உதிரத் திரை ஆர்ந்தன ஆல்.

     "அணியணியாகச் சேனைகள் சாய்ந்து மடியவும், கொன்று
அழிக்கப்பட்ட பெருமை வாய்ந்த உடல்கள் புழுதியோடு புழுதியாய்க்கிடந்து
புரளவும், பல தலைகள் கழுகுகளோடு மேலே பறந்து செல்லவும், ஆற்றோடு
மாறுபடப் பாய்ந்த குருதிக் கடலே எங்கும் நிறைந்தன".