பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்139

               64
வேலோடு வாளெடு வீரர்கள் மேலெதிரக்
கோலொடு கோலிய கொல்கரி சாய்ந்துபொரச்
சூலோடு சூழ்ந்துசு ளித்திடி மின்னொடுகக்
காலொடு காய்ந்ததிர் கார்த்திர ளொத்தனவே.
 
"வேலொடு வாள் எடு வீரர்கள் மேல் எதிர,
கோலொடு கோலிய கொல் கரி சாய்ந்து பொர,
சூலொடு சூழ்ந்து, சுளித்து, இடி மின்னொடு உக,
காலொடு காய்ந்து, அதிர் கார்த் திரள் ஒத்தனவே.

     "வேலோடு வாளையும் எடுத்துக்கொண்ட வீரர்கள் தம்மீது
எதிர்கொண்டு வரவும், அங்குசத்தால் வளைத்து நடத்திய கொல்லும்
தன்மையுள்ள யானைகள் அவர்மீது சாய்ந்து போரிடவுமாக, சூலோடு
வானமெங்கும் சூழ்ந்து, காற்றோடு மோதி, இடியும் மின்னலும் கூடி
விழுமாறு சினந்து முழங்கிய கருமேகத் திரளை ஒத்துத் தோன்றின.

     யானை கருமேகம், வேல் வாள்களின் ஒளி மின்னல், வீரரும்
யானையும் செய்யும் முழக்கம் இடி என்று கொள்க. மேகத்திற்குச் 'சூல்'
இடியும் மின்னலும் நீரும் என்க.

                65
கோடையெ ழுந்தப தங்கனெ னக்கொடிநீ
ளாடையெ ழுந்தக லாகவ நீளடவி
பீடையெ ழுந்துபெ ரும்படை வாடியற
மாடையெ ழுந்துயர் தேர்வரு சோசுவனே.
 
"கோடை எழுந்த பதங்கள் என, கொடி நீள்
ஆடை எழுந்து, அகல் ஆகவ நீள் அடவி
பீடை எழுந்து பெரும் படை வாடி அற,
மாடை எழுந்து உயர் தேர், வரு சோசுவனே.

     "பொன்னாற் செய்து நிமிர்ந்து உயர்ந்து நின்ற ஒரு தேரின் மீது,
நீண்ட துணிக்கொடி நிமிர்ந்து தோன்ற, கோடைக் காலத்தில் எரிந்து
எழுந்த ஞாயிறுபோல், பரந்து கிடந்த போர்க்களமாகிய நீண்ட காட்டில்
பகைவர் பெரும்படை துன்பம் மிகுந்து வாடி அழியுமாறு, சோசுவன் வந்து
தோன்றுவான்.