பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்140

     'நீள் ஆடைக் கொடி' என மாற்றுக, போர்க் களம் 'அடவி'
என்றதற்குப் பொருந்தப் 'பெரும்படை' மரங்கள் எனக் கொள்க.

               66
மிடலொடு வேகமி ருந்தெறி வெங்கணைகள்
படலொடு மேகம லிந்தப ருப்பதமொத்
துடலொடு வேழமு ருண்டுகு வெங்குருதிக்
கடலொடு தீவுகி டந்தன காட்சியதே.
 
"மிடலொடு வேகம் மிகுந்து எறி வெங்கணைகள்
படலொடு, மேகம் மலிந்த பருப்பதம் ஒத்த
உடலொடு வேழம் உருண்டு, உது செங் குருதிக்
கடலொடு தீவு கிடந்து அன காட்சியதே.

     "சோசுவன் வலிமையோடு வேகமும் மிகுந்து எறிந்த கொடிய
அம்புகள் தம்மீது படவே, மேகம் நிறைந்த மலையை ஒத்த உடலோடு
யானைகள் உருண்டு விழுந்து, அவ்வுடலினின்று சொரியும் செங்குருதியால்
அமைந்த கடலோடு தீவு கிடந்தது போன்ற தோற்றம் தருவதாகும்.

     'மேகம் மலிந்த பருப்பதம்' என்றது, யானையின் உருவமும் உயரமும்
குறித்து நின்றது. ஒத்த + உடல் - 'ஒத்தவுடல்' என்பது, 'ஒத்துடல்' எனத்
தொகுத்தல் விகாரமாயிற்று. காட்சியது - 'காட்சியை உடையது' எனப்
பொருள்படும் குறிப்பு வினைமுற்று,

                67
படுகணை யல்லது பட்டில தொன்றிலதால்
விடுகணை யாவையும் வீழ்த்தலில் வில்லிசையாற்
றொடுகணை மாரிது ளித்தன பின்றொகையற்
றடுகணை வாரிய னைத்தையும் வாரினவே.
 
"படு கணை அல்லது பட்டிலது ஒன்று இலையால்,
விடு கணை யாவையும் வீழ்த்தலில், வில் விசையால்
தொடு கணை மாரி துளித்தன; பின் தொகை அற்று
அடு கணை வாரி அனைத்தையும் வாரினவே.