பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்191

                    அதுனீசதன் அணிவகுப்பு

      - விளம், - விளம், - மா, கூவிளம்.

             131
சிறைபதி தேரினன் றீப்பெய் வில்லினன்
பிறைபதி முடியினன் பெயர்செய் வாகையன்
னறைபதி தொடையின னளிபன் மன்னவ
ரிறைபதி யடியின னொந்தன் றெஞ்சினான்.
 
"சிறை பதி தேரினன், தீப் பெய் வில்லினன்,
பிறை பதி முடியினன், பெயர் செய் வாகையன்,
நறை பதி தொடையினன், நளி பல் மன்னவர்
இறை பதி அடியினன் நொந்து அன்று எஞ்சினான்.

     "சிறகுகள் பொருந்திய தன்மையாய் விரைந்து செல்லும் தேரை
உடையவனும், நெருப்பைப் பொழியும் வில்லை உடையவனும், பிறை
வடிவம் பதித்த முடியை உடையவனும், தன் பெயரே ஈட்டித்தரும்
வெற்றியை உடையவனும், மணம்பொருந்திய மாலையை அணிந்தவனும்,
செறிந்த பல மன்னர் தந்த திறை செறிந்து கிடைக்கும் கால்களை
உடையவனுமாகிய அதுனீசதன், நான்கு மன்னரும் மடிந்த தன்மையால்
நொந்து அன்று மெலிந்தான்.

            132
ஓரிரு நூறுற ழொருமுந் நூறுடை
யீரிரு வகைப்படை யீட்டி னான்பினர்
பேரிரு சிறகெனப் பிரித்த தற்குவெம்
போரிரு வரியென விருவர்ப் போக்கினான்.
 
"ஓர் இருநூறு உறழ் ஒரு முந்நூறு உடை
ஈர் இரு வகைப் படை ஈட்டினான்; பினர்
பேர் இரு சிறகெனப் பிரித்து, அதற்கு வெம்
போர் இரு வரி என இருவர்ப் போக்கினான்.

     "ஓர் இரு நூறு கொண்டு பெருக்கிய ஒரு முந்நூறு, அதாவது
அறுபதினாயிரம்-என்று எண்ணிக்கைக்கொண்ட நால்வகைப் படைகளைத்
திரட்டினான்; பின்னர் அதனைப் பெரிய இரு சிறகுகள் போல இரண்டு
பிரிவாகப் பிரித்தான்; அப்பிரிவுக்கு ஒவ்வொன்றாக, கொடிய போரில்
வல்ல இரண்டு புலிகள் போல இருவரைத் தலைவராக அனுப்பி வைத்தான்.