|
முன் பாடலில்
வைத்த முறைப்படி, இங்கும் கனையன் இடப் புறமும்
அச்சுதன் வலப் புறமும் உள்ள எதிரிகளோடு மோதினர் எனக் கொள்க.
இரு புறந்து அணியும் கூறி, சோசுவனும் முட்டினாள் எனவே, அது நடுவணி
என்பது பெறப்பட்டது. வல் + யானையர் - 'வல்லி யானையர்' என யகரப்
புணர்ச்சியில் இகரம் தோன்றிற்று.
| 135 |
கார்விளை
முழக்கமுங் காலொடுங்கட
னீர்விளை முழக்கமு நிகரி லாதவெம்
போர்விளை முழக்கமேற் பொருமிப் பொங்கலிற்
பார்விளை கலக்கநாற் றிசைப ரந்ததே |
| |
"கார் விளை
முழக்கமும், காலொடும் கடல்
நீர் விளை முழக்கமும் நிகர் இலாத வெம்
போர் விளை முழக்கம், மேல் பொருமிப் பொங்கலின்,
பார் விளை கலக்கம் நால் திசை பரந்ததே. |
"கரு மேகத்தில்
தோன்றும் இடி முழக்கமும், காற்றோடு கூடிய கடல்
நீரின் முழக்கமும் ஒப்பாதல் இல்லாத கொடிய அப்போரில் விளைந்த
முழக்கம், மேலே எழுந்து பொங்கியதனால், இம் மண்ணுலகில் விளைந்த
கலக்கம் நான்கு திசைகளிலும் பரந்தது.
| 136 |
போர்முகங்
காண்டலும் புனைந்த வாகையின்
சீர்முகங் கோடலுஞ் சேர்ந்தொன் றாய்ப்புக
ழார்முகந் தருமறைக் கரச னன்றுதன்
கார்முகங் குனிமுகத் தெதிர்கண் டானரோ. |
| |
"போர் முகம்
காண்டலும் புனைந்த வாகையின்
சீர் முகம் கோடலும் சேர்ந்து ஒன்றாய், புகழ்
ஆர் முகம் தகும் மறைக்கு அரசன், அன்று, தன்
கார் முகம் குனி முகத்து எதிர் கண்டான் அரோ. |
"போர் முனையைத்
தான் காணுதலும் புனைந்த வெற்றியின் சிறப்பைத்
தன் முகமாக்கிக் கொள்ளுதலும் ஆகிய இரண்டும் சேர்ந்து ஒன்றாகி,
இவ்வாறு என்றும் புகழ் நிறைந்த முகத்தோடு விளங்கும் வேத மன்னனாகிய
சோசுவன், அன்று மட்டும், தன் வில்லை வளைத்தவிடத்து அதற்கு எதிரான
ஒரு நிலையைக் கண்டான்.
|