பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்195

             139
நூனலங் குலநல நுனித்த போர்நலந்
தானலம் படச்சொலித் தானை மிட்டுவேய்க்
கானலஞ் சினந்ததீக் கனன்று மேய்ந்தென
வேனலம் பகைவரை வெம்பித் தூற்றினான்.
 
"நூல் நலம் குல நலம் நுனித்த போர் நலம்,
தான், நலம் படச் சொலி, தானை மீட்டு, வேய்க்
கான் நலம் சினந்த தீ கனன்று மேய்ந்து என,
வேல் நலம் பகைவரை வெம்பித் தூற்றினான்."

     "கனையன், வேத நூல் நலமும் யூதர் குல நலமும் நுணுகிய
போர் நலமும் தானே நலம்பட எடுத்துரைத்து, தன் சேனையை மீண்டும்
வீர நிலைக்குக் கொணர்ந்து, சினந்த தீ மூங்கிற் காட்டின் நலத்தை
மூண்டெறிந்து மேய்ந்து அழித்தாற் போல, தன் வேலின் நலத்தால்
கொதிப்புடன் பகைவரைக் கொன்று களமெங்கும் தூற்றினான்.

               140
எரிகெடச் சினந்தவில் லெறிந்த மாரிமுன்
பரிகெடப் பரிபுனை பறந்த தேர்கெடக்
கரிகெடப் படையெலாங் கலங்கிப் போர்கெட
நரிகெடச் சினத்தரி நலத்திற் கோறினான்.
 
"எரி கெடச் சினந்த வில் எறிந்த மாரி முன்
பரி கெட, பரி புனை பறந்த தேர் கெட,
கரி கெட, படை எலாம் கலங்கிப் போர் கெட,
நரி கெட சினத்து அரி நலத்தின் கோறினான்.

     "தீயின் கொடுமையும் கெடுமாறு சினந்த வில்லால் எறிந்த அம்பு
மழையின் முன் பகைவரது குதிரைகள் அழியவும், குதிரை பூட்டிப் பறந்த
தேர்கள் அழியவும், யானைகள் அழியவும், படை வீரரெல்லாம் கலங்கிப்
போர் அழியவுமாக, அரிமா போன்ற தனது சினத்து நலத்தின் முன்
பகைவர் நரிபோல் அழியுமாறு கொன்று குவித்தான்.

     'கொல்' என்ற பகுதியின் தொழிற் பெயர் வடிவம் 'கோறல்' என்பது.
அதனைக் கோறு + அல் எனப் பிரித்து, 'கோறு' என்பதே பகுதியாகக்
கொண்டு, 'கோறினான்' என இறந்த கால ஆண்பால் வினைமுற்று
அமைக்கப்பட்டுள்ளது.