பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்205

                     156
இருமு கத்தெதிர் படைகள் சிந்திட விருவர் வெஞ்சமர்                                       பெருகலின்
வருமு கத்தெதிர் நிகல னின்றெறி வளையு டன்றுறி யிடிமுகிற்
கருமு கத்திடை மதிநு ழைந்தென வெதிர வன்கட வியகரி
செருமு கத்திடை யுரநு ழைந்துயிர் சிதைய வுண்டது திகிரியே,
 
"இரு முகத்து எதிர் படைகள் சிந்திட இருவர் வெஞ் சமர் பெருகலின்
வரு முகத்து, எதிர் நிகலன் நின்று எறி வளை உடன்று உறி, இடி முகில்
கரு முகத்திடை மதி நுழைந்து என, எதிரவன் கடவிய கரி
செரு முகத்திடை உரம் நுழைந்து, உயிர் சிதைய உண்டது திகிரியே.

     "இரு முகமாக எதிர்த்து நின்ற இரு படைகளும் சிதறுமாறு
அவ்விருவரும் செய்த கொடிய போர் பெருகி வருகையில், எதிரே நிகலன்
நின்று எறிந்த சக்கரம் சினந்தாற்போல் சென்று, இடியைக் கொண்டுள்ள
மேகத்தின் கரிய முகத்தினுற் மதி நுழைந்தது போல, போரின் முகத்தே
எதிராளியாகிய சச்சுதன் செலுத்திய யானையின் மார்பினுள் நுழைந்து,
அச்சக்கரமே அதன் உயிரைச் சிதையுமாறு உண்டது.

                       157
கரிய வுச்சிய முகிலின் மின்னொடு கனலு மிழ்ந்திழி யிடியெனா
வரிய சச்சுத னிபமி ழிந்தழ லசிசு ழன்றவ னிரதமே
லுரிய நச்சர வெனவி வர்ந்தவ னுடல்பி ளந்தெதிர் படையெலா
மிரிய வச்சமோ டுளமு டன்றவ னிரத முந்தின னடவினான்.
 
"கரிய உச்சிய முகிலின் மின்னொடு கனல் உமிழ்ந்து இழி இடி எனா,
அரிய சச்சுதன் இபம் இழிந்து, அழல் அசி சுழன்று, அவன் இரதமேல்,
உரிய நஞ்சு அரவு என, இவர்ந்து, அவன் உடல் பிளந்து, எதிர் படை                                                எலாம்
இரிய அச்சமோடு, உளம் உடன்று, அவன் இரதம் உந்தினன்                                                நடவினான்.