பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்213

     "மான்கள் போல எதிரிப் படை முறிந்து ஓடவும், அரிமா போலச்
சினந்து மொய்த்த வேத நெறியினராகிய யூதர் மழை போலத் தொடுத்த
அம்போடு பல படைக் கருவிகளையும் அவ்வழி யெல்லாம் செலுத்தவே,
பெருங்காற்றின் முன் இலைகள் உதிர்வதுபோல் அளவில்லாத உயிர்கள்
மடிந்தன. உதிரமும் அலை போலப் பெருக விட்டு, ஆண்டவன்
இசைந்துகொண்ட சீற்றத்தின் முன் பாவம் மடிவதுபோல அப்படைகள்
வகை வகையாய் மடிய, அவ்வுதிரம் மேலும் பெருகும் தன்மைக்கு ஓர்
உவமை கூற அளவென்று ஒன்றும் உண்டோ?


                     167
வினைமு டுக்கிய பகையவ ரிரிதர விசய முற்றன களியெழு
                                  மிறையவன்
முனைமு டுக்கிய தமரமர் தொடர்கில முனைநி றுத்திய
                                  பொழுதினு மரிதமர்
தனைமு டுக்கிய கடவுடன் வயவலி தருசி னத்திற மறிகுவர்
                                  வெருவுறிக்
கனைமு டுக்கிய கடலுடை யகல்புவி கடிந டுக்குற விரிபடை
                                  கொலைசெய்தான்.
 
"வினை முடுக்கிய பகையவர் இரிதர, விசயம் உற்றன களி எழும்
                                   இறையவன்,
முனை முடுக்கிய தமர் அமர் தொடர்கு இல முனை நிறுத்திய
                                    பொழுதினும், அரிது அமர்
தனை முடுக்கிய கடவுள், தன் வய வலி தரு சினத் திறம் அறிகுவர்
                                   வெரு உறி,
கனை முடுக்கிய கடல் உடை அகல் புவி கடி நடுக்கு உற, விரி
                                   படை கொலை செய்தான்.

     "தம் தீவினைகளால் துரத்துண்ட பகைவர் இவ்வாறு முறிந்து
ஓடவே, வெற்றி பெற்ற களிப்பால் எழுச்சி கொண்ட சோசுவ மன்னன்,
மேலும் போரை முடுக்கிய தன்னவர் போரைத் தொடராதவாறு அப்
போரை அத்துடன் நிறுத்திக் கொண்டான். ஆயினும், அரிய முறையாய்
அப் போரை முடுக்கிய கடவுள், தன் அளவற்ற வல்லமை தரும் சினத்தின்
தன்மையைத் தெரிய வருபவர் அச்சங்கொண்டு, அதன் மூலம் தன்
முழக்கத்தைப் பெருக்கிய கடலை ஆடையாகக் கொண்ட அகன்ற
மண்ணகமெல்லாம் மிக்க நடுக்கங் கொள்ளுமாறு, அப்பகைவர்தம் விரிந்த
படையை முற்றும் கொன்று முடித்தான்.