பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்214

                 கடவுள் விளைவித்த அழிவு

      - விளம், கருவிளம், - விளம், கருவிளம்.

              168
முரிதரு பகையவர் முழுதட வவர்மிசை
விரிதரு வலைகவிழ் வனவென வெகுளிடி
யெரிதரு கருமுகி லிடையிடை யொருகணம்
பரிதரு முனருயர் பரவின வெளியெலாம்.
 
"முரி தரு பகையவர் முழுது அட, அவர் மிசை
விரி தரு வலை கவிழ்வன என, வெகுள் இடி
எரி தரு கரு முகில், இடை இடை, ஒரு கணம்
பரி தரு முனம், உயர் பரவின வெளி எலாம்.

     "முறிந்தோடிய பகைவரை முற்றிலும் கொன்று ஒழிக்கும் வண்ணம்,
விரித்த வலையை அவர்மீது கவிழ்த்தியதுபோல, சினமுள்ள இடியோடு
எரியும் கரிய மேகங்கள், ஒரு கணப்பொழுது அறுவதற்குள், இடந்தோறும்
இடந்தோறும், உயர்ந்த வானவெளி முழுவதும் பரவின.

                169
முனைமுதிர் படையெழ முரசதி ரொலியெனச்
சினைமுதி ரிடியொடு செருமுதிர் சினமெழக்
கனைமுதி ரரவொடு கருமுகில் பரவலின்
வினைமுதி ருளமென வெளிமுதி ரிருளதே.
 
"முனை முதிர் படை எழ முரசு அதிர் ஒலி என,
சினை முதிர் இடியொடு செரு முதிர் சினம் எழ
கனை முதிர் அரவொடு கரு முகில் பரவலின்,
வினை முதிர் உளம் என வெளி முதிர் இருள் அதே.

     "வீரம் முதிர்ந்த படை போருக்கு எழுமாறு முரசு முழங்கும்
ஒலிபோல, கருவாகக்கொண்ட முதிர்ந்த இடியோடும் போருக்குரிய
முதிர்ந்த சினத்தோடும் எழுந்து, முழங்கும் முதிர்ந்த ஓசையோடு கருமேகம்
பரவிய காரணத்தால், தீவினையில் முதிர்ந்த உள்ளம்போல் வான வெளியில்
பரந்த முதிர்ந்த இருளாகும் அது.

                170
முடியொடு முடிபட வரைமுனை வனவென
விடியொடு சினமுதி ரெரிமுகி லெதிர்பொரும்
படியொடு பிரிபருப் பதமென வசனியின்
வெடியொடு மழையென விழுவன வுபலமே.