பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்217

             175
வானவ ரனைவரு மலைமலி யுலகுள
வேனைய ரனைவரு மிதயமுள் வெருவுறி
யானவை யறிதலொ டளவில விறையவன்
மேனிவ ரருமிடல் விழைவொடு புகழுவார்.
 
"வானவர் அனைவரும், அலை மலி உலகு உள
ஏனையர் அனைவரும், இதயம் உள் வெரு உறி,
ஆனவை அறிதலொடு, அளவு இல இறையவன்
மேல் நிவர் அரு மிடல் விழைவொடு புகழுவார்.

     "வானவர் அனைவரும் கடல் சூழ்ந்த மண்ணுலகத்துள்ள ஏனைய
மக்கள் அனைவரும் அங்கு நிகழ்ந்தவற்றை அறிந்ததுமே இதயத்துள்
அச்சம் கொண்டு, யாவற்றிற்கும் மேலாக உயர்ந்து நிற்கும் அளவில்லாத
ஆண்டவனின் அரிய வல்லமையை ஆசையோடு புகழ்வர்.

     'ஏனையவர்' என்றது, அப்பகைவரல்லாத ஏனையரை என அறிக.

              176
வில்லொடு வயவரு மிடலிடு மமரல
தெல்லொடு பிரிகில விரவியு மமர்செய
வல்லொடு தவிரின சிலவுயிர் மடிதரக்
கல்லொடு மழைபொரு திறையது கதமென.
 
"வில்லொடு வயவரும் மிடல் இடும் அமர் அலது,
எல்லொடு பிரிகு இல இரவியும் அமர் செய,
வல்லொடு தவிரின சில உயிர் மடி தர,
கல்லொடு மழை பொருது, இறையது கதம் என.


     "வில்லைக்கொண்டு வீரரும் தம் வலிமை காட்டிச் செய்யும் போராய்
அமையாமல், கதிரவனும் தன் கதிர்களோடு பிரிந்து மறையாமல்
அப்போரைத் தொடர்ந்து செய்ய, அறிவு வன்மையால் தப்பிப் பிழைத்த சில
உயிர்களும் சேர்ந்து மடியுமாறு, ஆண்டவனின் சீற்றம் என்னத் தக்கவாறு,
கல்லோடு கூடிய மழையே போரைச் செய்து நின்றது.

     மாலைப் பொழுது வந்தும் மறையாமல், சோசுவன் ஆணைப் படி
பகலே நீடிக்க நின்ற பகலவன், அப்போரைத் தானே தொடர்ந்து
செய்தவன்போல் ஆனான். பொருது-'பொருதது' என்ற சொல்லின்
இடைக்குறை.