பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்229

     "தேனை மிகுதியாகப் பொழியும் குளிர்ந்த பூமாலை அணிந்த
சேதையோன், வேதத்தைப் பகைத்த தம் முழு உடல் வலிமையோடு
போருக்கு வந்த வேற்படை வீரர் ஒருங்கே அழிந்து கெடுமாறு, கொடிய
போரில் வேல் முதலிய கருவிகள் முழுவதும் ஒன்றும் இல்லாமல்,
வானுலகம் முழுவதும் வணங்கும் ஆண்டவனது வலிமையின் உருவமாக,
தான் படைக்கருவியாகக் கொண்ட விளக்கும் எக்காளமுமே இவை"
என்றான்.

     'விளக்கும் காளமும்' என்ற பன்மை, படைக்கருவி என்ற பொதுமை
கருதி, 'இது' என ஒருமை முடிபு கொண்டது, எண் வழுவமைதியாகக்
கொள்க. நாய்கன் - 'நாயகன்' என்பதன் இடைக்குறை.

                     7
வான்சுவைத் தகவிற் றேவ வாழ்த்திரு செவியின் வாயாற்
றான்சுவைத் தல்ல தல்லற் றகும் பசி யாற்றா நீரா
னூன்சுவைத் துடன்ற போரி லுற்றது சொன்மி னென்னத்
தேன்சுவைத் துமிழ்தீஞ் சொல்லாற் செப்புத லுற்றான்
                                      வானோன்.
 
வான் சுவைத் தகவின் தேவ வாழ்த்து இரு செவியின் வாயால்
தான் சுவைத்து அல்லது, அல்லல் தரும் பசி ஆற்றா நீரான்,
"ஊன் சுவைத்து உடன்ற போரில் உற்றது சொன்மின்" என்ன,
தேன் சுவைத்து உமிழ் தீம் சொல்லால் செப்புதல் உற்றான்
                                          வானோன் :

     வானுலகிற்குரிய சுவைத் தகுதிக்கொண்ட தெய்வ வாழ்த்தாகிய
உணவைத் தன் இரு செவியாகிய வாயால் தான் கேட்டுச் சுவைத்தாலன்றி,
துன்பம் என்னத்தரும் பசியை ஆற்ற இயலாத தன்மையனாகிய சூசை,
"சினந்து செய்த போரில் பகைவர் ஊனைச் சுவைத்து உற்றதெல்லாம்
சொல்வாய்" என்னவும், தேனைச் சுவைத்து உமிழ்ந்தது போன்ற இனிய
சொல்லால் அவ்வானவன் பின் வருமாறு சொல்லத் தொடங்கினான்:

     சொன்மின் - 'மின்' என்ற ஏவற் பன்மை விகுதி ஒருமைக்கும்
உரியதாகக் கொள்ளுதல் முனிவர் மரபு. முன் 15 / 7 'கேண் மின்' என
ஒருமை சுட்டியதும் காண்க. செவியை வாயாகவும் அல்லலைப் பசியாகவும்
உருவகப்படுத்தியதற்கேற்ப, வாழ்த்து உணவாக விரித்துரைக்கப்பட்டது.