பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்232

                  10
ஒழிந்த மாற்றல ருறைந்தபல் லுழித்தொறு முறைந்தாண்
டிழிந்த மாரியி னிருந்திரு யூதர்கள் பின்னாள்
விழிந்த தேவரை மேவலி னறமொடு விரத
மழிந்த பான்மையா லடலழிந் தொளியழிந் தழிந்தார்.
 
"ஒழிந்த மாற்றலர் உறைந்த பல் உழித் தொறும் உறைந்து ஆண்டு,
இழிந்த மாரியின் இருந் திரு யூதர்கள் பின் நாள்
விழிந்த தேவரை மேவலின், அறமொடு விரதம்
அழிந்த பான்மையால், அடல் அழிந்து ஒளி அழிந்து அழிந்தார்.

     "இவ்வாறு ஒழிந்த பகைவர் முன் குடியிருந்த பல இடந்தோறும் தாம்
குடிபுகுந்து ஆண்டு, இறங்கிப் பொழிந்த மழை போல் பெருஞ்செல்வம்
கொண்டிருந்த யூதர்கள், பிற்காலத்தில் கண்டகண்ட தேவர்களையெல்லாம்
விரும்பி ஏற்றுக்கொண்டமையால், தம் நல்லறத்தோடு விரத முறைகளும்
அழிந்த தன்மையால், வலிமையும் அழிந்து புகழும் அழிந்து தாமும்
அழிந்தார்.

                11
அறம கற்றீனா ரறப்பயத் தாண்டவ னளித்த
திறம கற்றினார் சிதைவுற வறிவுறிக் கொடிய
மறம கற்றினார் வணங்கிய விறைவனுஞ் சிறுமை.
புறம கற்றினான் பொருவில வலித்திறம் விளங்க.
 
"அறம் அகற்றினார்; அறப் பயத்து ஆண்டவன் அளித்த
திறம் அகற்றினார்; சிதைவு உற அறிவு உறி, கொடிய
மறம் அகற்றினார். வணங்கிய இறைவனும் சிறுமை
புறம் அகற்றினான், பொருவு இல வலித் திறம் விளங்க.

     "அவ்யூதர் அறநெறியைக் கைவிட்டனர்; அதனால், அறத்தின் பயனாக
ஆண்டவன் தமக்குத் தந்திருந்த வலிமையை நீங்கச் செய்து கொண்டனர்;
அழிவதற்குரிய அறிவையே கைக் கொண்டு, கொடிய பாவங்களைப் பெருகச்
செய்தனர். எனினும், முன் அவர் முறையாக வணங்கி வந்த ஆண்டவனோ.
ஒப்பற்ற தன் வல்லமையின் திறம் உலகிற்கு விளங்குமாறு, அவர் அடைந்த
சிறுமையைப் புறத்தே நீக்கித் தள்ளினான்.