பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்235

"வேல் முகந்து இவர் வெஞ் சமர்க்கு அமைகுவர்
                                   என்னா,
மீன் முகந்து ஒளி விரி மணி முடிப் பல அரசர்,
ஊன் முகந்த கோட்டு உவா பரி தேர் பல பண்ணி,
நால் முகம் தகு ஞாலமும் நெளி தரத் திரண்டார்.

     "இவ்யூதர் வேல்களை ஏந்திக்கொண்டு கொடிய போருக்கு
முற்படுபவரென்று முன் கருதி, விண்மீனிடத்து முகந்து கொண்டது போன்று
ஒளி விரியும் மணிகள் பதித்த முடியை அணிந்த பல அரசர், பகைவர்
ஊனை முகந்து கொண்ட கொம்புகளை உடைய யானைகளும் குதிரைகளும்
தேர்களும் பலவாகச் சித்தஞ் செய்து, நான்கு திசைமுகம் கொண்ட தகுதி
வாய்ந்த உலகத்தின் முதுகும் நெளியத் தக்கவாறு திரண்டெழுந்தனர்.

                    பகைவர் படையணி

     - மா, புளிமா, புளிமா, புளிமாங்காய், தேமா

                  16
துதியா னிகரா வலியான் சுடுமேறு வில்லான்
றிதியா வுமெரிந் துகெடத் தழறிக்கு கண்ணான்
மதியா னெனுமா பெயரான் வரையாத வெண்ணிற்
பதியா தபடைக் கடல்பண் ணியதிர்ந் தெதிர்த்தான்.
 
"துதியால் நிகரா வலியான், சுடும் ஏறு வில்லான்,
திதி யாவும் எரிந்து கெடத் தழல் திக்கு கண்ணான்,
மதியான் எனும் மா பெயரான், வரையாத எண்ணில்
பதியாத படைக் கடல் பண்ணி, அதிர்ந்து எதிர்த்தான்.

     "புகழால் ஒப்பிடற்கரிய வலிமை உடையவனும், சுடும் தன்மை
கொண்ட இடி போன்ற வில்லை உடையவனும், திசையெங்கும் நிலை
பேறுள்ள யாவும் எரிந்து கெடுமாறு எரியும் கண்களை உடையவனுமாகிய
மதியான் என்னும் பெரும் பெயர் மன்னன், வரையறை இல்லாததும்
எண்ணிக்கையில் அடங்காததுமான படைக் கடலை அமைத்துக் கொண்டு,
முழங்கிய வண்ணமாய் எதிர்த்தான்.

     'திக்கு' என்பதனைப் பிரித்து, 'திதி' என்பதன் முன் கூட்டுக.