பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்242

"'வவ்வு ஒரு வேல் இல, மாங்குல் நாப்பணில்,
கவ்வு ஒரு காளம், மண் கலம், விளக்கு - இவை,
ஒவ்வொருவற்கு, இடுக' என உரைத்தனன்,
செவ் ஒரு திருவிளையாட்டுத் தேவனே.

     "எதனையும் செவ்வையான திருவிளையாடலாக நிகழ்த்தும்
ஆண்டவன் 'பிடித்த வேல் ஒன்றும் இல்லாமல், நடு இரவில் இவருள்
ஒவ்வொருவனுக்கும் கையில் பற்றக்கூடிய ஓர் எக்காளம், ஒரு மண்
பானை, ஒரு விளக்கு - இவற்றைக் கொடுப்பாயாக' என்று கூறினான்.

     இடுக + என - 'இடுகவென' என்பது, 'இடுகென' எனத் தொகுத்தல்
விகாரமாயிற்று.

                 29
செம்முகம் புதைத் தொளி சிகன்ற பின்செயம்
நும்முகந் தகுமென நூறு நூறுமாய்
மும்முகம் பிரித்துமூன் றிட்டு மொய்ப்பகை
யம்முகம் வாய்விடா தணுகி னாரரோ.
 
"செம் முகம் புதைத்து ஒளி சிகன்ற பின், 'செயம்
நும் முகம் தகும்,' என, நூறும் நூறுமாய்
மும்முகம் பிரித்து, மூன்று இட்டு, மொய்ப் பகை
அம் முகம் வாய் விடாது அணுகினார் அரோ.

     "கதிரவன் தன் செந்நிற முகத்தைக் கடலில் புதைத்து மறைந்தபின்,
'வெற்றி உம் பக்கம் வாய்க்கும்' என்று சேதையோன் கூறி, நூறு நூறாக
மூன்று அணி பிரித்து, எக்காளம் மண்பானை விளக்கு ஆகிய மூன்றும்
தந்ததும், அவ்வீரர் போருக்குரிய பகைவர் இருந்த அவ்விடத்தை வாய்ப்
பேச்சின்றி அணுகினர்.

     'அரோ' அசைநிலை.