பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்246

     "போரில் முதிர்ந்த அப்பகைவர், மயக்கம் முதிர்ந்த அச்சத்தோடு,
தம்மை வளைத்துக் கொண்ட இச்செயல் தம் பாவம் வளர்ந்து பயனை
விளைவித்த நேரம் அது வென்று கருதியும், தெளிவு முதிர்ந்த
வேதத்தவராகிய யூதர் தம்மோடு கலந்து நின்ற தோற்றம் அதுவென்று
கருதியும், இருள் முதிர்ந்த இரவு வேளையில் நெருப்பு மூண்டெழுந்தது
போன்ற சினத்தோடு தம்மவரையே தாம் வெட்டிக் கொன்று போடப்
போட, அருள் முதிர்ந்த ஆண்டவனின் எல்லையற்ற வல்லமையின் திறம்
விளங்குமாறு, அரிய தன்மையாய் அப்போரை நடத்தினர்.


                      35
இடியெ ழுந்தவொலி முகிலெ திர்ந்ததென விழிமு திர்ந்தமத
                                       கரிபொர
முடியெ ழுந்தவரை யுயர்ப றந்துபொரு முனையி ணைந்திரத
                                       முனைசெயக்
கடியெ ழுந்ததிரை யெறிசி னந்தகட லெனவெ திர்ந்தகதி
                                       யிவுளிகள்
துடியெ ழுந்தபறை யொலிமு ழங்கவமர் தொடரு டன்றகொலை
                                       யளவதோ.
 
"இடி எழுந்த ஒலி முகில் எதிர்ந்தது என, இழி முதிர்ந்த மத கரி
                                     பொர,
முடி எழுந்த வரை உயர் பறந்து பொரு முனை இணைந்து, இரதம்
                                     முனை செய,
கடி எழுந்த திரை எறி சினந்த கடல் என. எதிர்ந்த கதி இவுளிகள்
துடி எழுந்த பறை ஒலி முழங்க, அமர் தொடர் உடன்ற கொலை
                                     அளவதோ?

     "உடுக்கையோடு கூடி எழுந்த பறையொலி முழங்க, இடியோடு கூடி
எழுந்த மேகங்கள் எதிர்ப்பட்டது போல், பாயும் முதிர்ந்த மதங் கொண்ட
யானைகள் போரிடவும், சிகரத்தோடு உயர்ந்து நின்ற மலைகள் மேலே
பறந்து போரிடும் களத்திற்கு ஒப்பாக, தேர்கள் போர் செய்யவும், விரைந்து
எழுந்த அலைகளை எறியும் சினந்த கடல் போல், எதிர்ப்பட்ட வேகமுள்ள
குதிரைகளும் போரைத் தொடர்ந்து தமக்குள் மாறுபட்டமையால் விளைந்த
கொலை அளவுக்கு அடங்குவதோ?