பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்249

     "மான் கூட்டங்களைக் கொல்லும்படி எதிர்கொண்டு வந்த
வலிமையான நகங்களை உடைய சினமுள்ள புலி போலவும், முள்ளைக்
கொண்ட மூங்கில்கள் காய்ந்து நின்ற காட்டில் நுழைந்து உண்ணும்
நெருப்புச் சீறி எழுந்த சினம் போலவும், மின்னல் ஒளியோடு பெய்த
மழைப் போன்ற அம்புகளும், ஓசை மிக்க வாள்களும், வாள்களை
மிஞ்சிய வேல்களும் உடலுள் நுழைந்து செய்யும் அகலமான துளைகளின்
வழியாக வழிந்தோடும் சிவந்த குருதி வெள்ளம் மருள் கொண்ட
அப்போர்க்களமெல்லாம் மூடி மறைத்தன.

     மூங்கிலுக்கும் கரும்புக்கும் பெயரான 'கழை' என்ற சொல், 'முள்'
என்ற அடை மொழியால், கரும்பை விலக்கி மூங்கிலை உணர்த்திற்று.

                    ஈரரசர் முடிவு

    - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

                  39
முருடொடு முரச மாதி முனிந்தபற் பறைக ளார்ப்ப
விருடொடு நிசியி லாதி யிறைவனைப் பகைத்த பாலான்
மருடொடு தலைவ ராதி மற்றவர் தமிற்றாந் தம்மை
யுருடொடு மிரத மாதி யுளபடை சிதைத்து மாய்த்தார்.
 
"முருடொடு முரசம் ஆதி முனிந்த பல் பறைகள் ஆர்ப்ப,
இருள் தொடு நிசியில், ஆதி இறைவனைப் பழித்த பாலால்,
மருள் தொடு தலைவர் ஆதி மற்றவர் தமில் தாம் தம்மை
உருள் தொடும் இரதம் ஆதி உள படை சிதைத்து மாய்த்தார்.

     "யாவற்றிற்கும் ஆதியாகிய ஆண்டவனைப் பழித்த தன்மையால்,
இருள் தொடுத்த நடுச் சாம வேளையில், உறுமிப் பறை முரசு முதலாகச்
சினந்தாற் போன்ற பல பறைகள் முழங்க, மயக்க வசப்பட்ட படைத்
தலைவர் முதலாக மற்றவரெல்லாம் தமக்குள் தாமே ஒருவரொருவரோடு
போரிட்டு, சக்கரம் பொருந்திய தேர் முதலாக உள்ள படைகளையெல்லாம்
சிதைத்து அழித்துக்கொண்டனர்.