பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்258

                   54
ஏமப் போர்க்களமி தென்ன விவ்வூர் களரியென்றார்
தாமத் தீபமொடு காளந் தந்த சயமதுவோர்
வாமப் பாவையவை யேந்தி யெந்தை வளமறவா
நாமத் திறல்காட்ட வைத்தா ரென்றா னவிவானோன்.
 
"ஏமப் போர்க் களம் இது என்ன, இவ் ஊர், 'களரி,' என்றார்;
தாமத் தீபமொடு காளம் தந்த சயம் அது ஓர்
வாமப் பாவை அவை ஏந்தி எந்தை வளம் மறவா
நாமத் திறல் காட்ட வைத்தார்" என்றான் நவி வானோன்.

     "பகைவர்க்கு மயக்கம் தந்த போர்க்களம் இது என்று காட்ட,
அவ்யூதர் இவ்வூரைக் 'களரி' என்ற பேரால் அழைத்தனர்; ஒளியுள்ள
விளக்கோடு எக்காளமும் தந்த வெற்றியை, ஓர் அழகிய பாவை அவற்றை
ஏந்தி நிற்க அமைத்து, நம் தந்தையாகிய ஆண்டவனின் கருணை
வளத்தைப் பின்னவர் மறவா வண்ணம் அவனது அச்சம் தரும்
வல்லமையைக் காட்டுமாறு வைத்தனர்" என்று கபிரியேல் என்னும் அழகிய
வானவன் முடித்துக் கூறினான்.

     களரி - போர்க்களம். பாவை - பொம்மை. நவி - 'நவ்வி' என்பதன்
இடைக் குறை. சூசையின் வணக்கம்

                 55
மாலைத் தூணுச்சி விரித்த நீல மணிப்படத்து,
வேலைத் தரளமென விளங்கு மீன்பூம் பந்தர்க்கீழ்,
பாலைக் கதிர்மதியந் தீப மேந்தப் பணித்தூண்மேற்
சாலைக் கடவுடிறற் கண்ட சூசை தகவுற்றான்.
 
மாலைத் தூண் உச்சி விரித்த நீல மணிப் படத்து,
வேலைத் தரளம் என விளங்கு மீன் பூம் பந்தர்க் கீழ்,
பால் ஐக் கதிர் மதியம் தீபம் ஏந்த, பணித் தூண் மேல்
சால் ஐக் கடவுள் திறல் கண்ட சூசை தகவு உற்றான்.

     மாலைப் பொழுதாகிய தூணின் உச்சியில் விரித்துக் கட்டிய நீலமணி
போன்ற மேற் கட்டியின் மீது, கடல் முத்துப்போல் விளங்கும்
விண்மீன்களாகிய பூக்களால் அழகு செய்த வானப் பந்தலின் கீழ், பால்
போன்ற அழகிய கதிர்களைக் கொண்ட திங்கள் விளக்கேந்தி நிற்க,
வேலைப்பாடு அமைந்த அத்தூணின் மேல் மிக்க வியப்புக்குரிய கடவுளின்
ஆற்றலை அடையாளமாகக் கண்டு கொண்ட சூசை பெருமை அடைந்தான்.