59 |
தானோர்
களிப்பெருக்கிற் பலவுஞ் சூசை சாற்றியபின்
வானோ ரவைகேட்ட களிப்பிற் பொங்கி மணிப்பண்யாழ்
தேனோ ரிசைதளிர்ப்பத் தாமும் பாடிச் செயிர் நீக்க
வீனோ ருடற்கொண்டோ னெடிது வாழ்த்தி யிசைசெய்தார். |
|
ன் ஓர் களிப்
பெருக்கின் பலவும் சூசை சாற்றிய பின்,
வானோர் அவை கேட்ட களிப்பின் பொங்கி மணிப் பண் யாழ்
தேன் ஓர் இசை தளிர்ப்பத் தாமும் பாடி, செயிர் நீக்க
ஈனோர் உடல் கொண்டான் நெடிது வாழ்த்தி இசை செய்தார். |
சூசை ஒப்பற்ற
மகிழ்ச்சிப் பெருக்கினால் தானும் இவ்வாறு பலவும்
சொல்லிப் போற்றிய பின், வானவரும் அவற்றைக் கேட்ட களிப்பினால்
பொங்கி, அழகிய பண் அமைந்த யாழில் தேன் போன்ற இசையைச்
செழுமையாகத் தாமும் பாடி, பாவங்களைப் போக்குமாறு ஈன
மனிதருக்குரிய உடலை எடுத்துக்கொண்டு அவதரித்த ஆண்டவனை
நெடிது வாழ்த்தி, இசை கூட்டினர்.
60 |
சிறந்த
திருப்புகழார் கீதங் கேட்ட செழுந்தவத்தோன்
றிறந்த மணிக்கதவம் புக்கம் வீட்டிற் சென்றவன்போன்
மறந்த மெய்யுருக மங்கு லெல்லாம் வழிவருத்தந்
துறந்த துயிலாகத் தொடுத்த தேவ துதிவிள்ளான். |
|
சிறந்த திருப்
புகழ் ஆர் கீதம் கேட்ட செழுந் தவத்தோன்,
திறந்த மணிக் கதவம் புக்கு அம் வீட்டில் சென்றவன் போல்,
மறந்த மெய் உருக, மங்குல் எல்லாம், வழி வருத்தம்
துறந்த துயில் ஆக, தொடுத்த தேவ துதி விள்ளான். |
இறைவனின் திருப்
புகழ் செறிந்த சிறந்த வானவர் பாடலைக் கேட்ட
செழுமையான தவத்தோனாகிய சூசை, திறந்து கிடந்த மணிகள் பதித்த
கதவின் வழியாகப் புகுந்து அழகிய வான் வீட்டிற்குள் சென்றவன்போல்,
தன்னை மறந்த உடல் உருக, இரவு முழுவதும், வழிநடை வருத்தம் தீர்ந்த
துயில் கொண்டிருந்தும், தான் தொடுத்த இறைத் துதியை விடாது
நினைவிற்கொண்டிருந்தான்.
சேதையோன்
வெற்றிப் படலம் முற்றும்
ஆகப்
படலம் 16க்குப் பாடல்கள் 1652
|