பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்262

 
பதினேழாவது

 
காசை சேர் படலம்

     சஞ்சோன் வீரங் காட்டிய காசை நகரில் திருக்குடும்பம் மூன்று
நாள் தங்கிய நிகழ்ச்சியைக் கூறும் பகுதி. சஞ்சோன் வரலாறு ப. ஏ.,
நீதிபதிகள் ஆகமம், 13 - 16 அதி.

        களரியினின்று காசை செல்லும் வழி

     - விளம், - விளம், - மா, கூவிளம்

               1
பள்ளியந் தாமரைப் பறவை யார்ப்பெழத்
தெள்ளியம் வைகறை தெளிப்ப வாரணம்
வெள்ளியன் றுதித்திருட் படத்தை மேதினி
தள்ளியம் முகந்தரத் தடங்கொண் டேகினார்.
 
பள்ளி அம் தாமரைப் பறவை ஆர்ப்பு எழ,
தெள்ளி அம் வைகறை தெளிப்ப வாரணம்,
வெள்ளி அன்று உதித்து, இருள் படத்தை மேதினி
தள்ளி அம் முகம் தர, தடம் கொண்டு ஏகினார்.

     அழகிய தாமரை மலரைப் படுக்கையாகக் கொண்ட
பறவைகளின் ஆரவாரம் எழவும், கோழிகள் கூவி அழகிய அதிகாலை
என்பதனை அறிவிக்கவும், அன்று விடிவெள்ளி உதித்து, நிலமகள்
இருளாகிய போர்வையை விலக்கித் தன் அழகிய முகத்தைக் காட்டவே,
திருக்குடும்பத்தினர் தடம் பிடித்து நடந்து சென்றனர்.

                2
புதையொளிப் பவளக்காற் பொலிய நீட்டிய
ததையொளி மரகதப் படத்துத் தைத்திருள்
வதையொளிப் பலமணி மான வாயெலாந்
துதையொளிப் பலமலர்ச் சோலை வண்ணமே.
 
புதை ஒளிப் பவளக் கால், பொலிய நீட்டிய
ததை ஒளி மரகதப் படத்துத் தைத்து, இருள்
வதை ஒளிப் பல மணி மான, வாய் எலாம்
துதை ஒளிப் பல மலர்ச் சோலை வண்ணமே.