பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்266

நண் பகல் நெற்றி வான் நடக்கும் காலை, ஆழ்
மண் பக ஊன்றி மேல் மலர்ந்த பூஞ்சினைச்
செண்பகம் நிழற்றிய மணல் தண் திண்ணை மேல்
ஒண் பகல் ஒத்து ஒளிர்ந்து உவந்து வைகினார்.

     நடுப் பகலில் பகலன் வானத்து உச்சியில் நடக்கும் வேளையில்,
மண் பிளக்குமாறு ஆழத்தில் வேர் ஊன்றி மேலே மலர்ந்த பூங்
கொம்புகளையுடைய சண்பக மரம் நிழல் செய்து நின்ற மணலாலான
குளிர்ந்த திண்ணையின்மேல், ஒளி பொருந்திய ஞாயிறுபோல் ஒளி வீசி
அம்மூவரும் மகிழ்ந்து தங்கினர்.

               9
அணிமுகத் தளியின மலம்பி யாழ்செய
மணிமுகக் குயிலின மகிழ்ந்து பாடவொண்
பிணிமுகத் தினஞ்சிறை பிரித்தங் காடலிற்
பணிமுகக் கதலிநற் பழன்கண் மாந்தினார்.
 
அணி முகத்து அளி இனம் அலம்பி யாழ் செய,
மணி முகக் குயில் இனம் மகிழ்ந்து பாட, ஒன்
பிணி முகத்து இனம் சிறை பிரித்து அங்கு ஆடலின்,
பணி முகக் கதலி நல் பழன்கள் மாந்தினார்.

     வண்டுக் கூட்டங்கள் அணி வகுத்த தன்மையாய் இரைந்து
யாழொலியைப் பிறப்பிக்கவும், நீலமணி போன்ற குயில் இனங்கள்
மகிழ்ந்து பாடவும், தம் ஒளியால் காண்போர் கண்களைப் பிணிக்கும்
தன்மையாய் மயில் இனங்கள் சிறகுகளை விரித்து அங்கு ஆடவும்
கண்டு, குலைகள் வளைந்து பணிந்த தன்மை கொண்ட வாழையில்
நல்ல பழங்களை உண்டனர்.

     பழன் - பழம் என்பதன் கடைப் போலி.

                10
தேஞ்சினை மலர்மதுத் தின்ற வண்டரு
காஞ்சினை யொசிந்தினி தலம்புந் தன்மைபோற்
றாஞ்சினை மலர்த்தொடை தாளிற் பெய்துபைம்
பூஞ்சினை முகத்திருப் புதல்வன் வாழ்த்தினார்
 
தேன்சினை மலர் மதுத் தின்ற வண்டு அருகு
ஆம்சினை ஒசிந்து இனிது அலம்பும் தன்மை போல்,
தாம்சினை மலர்த் தொடை தாளில் பெய்து, பைம்
பூஞ்சினை முகத் திருப் புதல்வன் வாழ்த்தினார்.