பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்267

     தேனைக் கருக் கொண்டுள்ள மலர்களின் மதுவை அருந்திய
வண்டு அதன் அருகிலுள்ள கிளையில் அசைந்தாடி இனிதாக இரையும்
தன்மைபோல், சூசையும் மரியாளுமாகிய அவ்விருவர் தாமும்
கிளையிலுள்ள மலர்களைப் பறித்துத் தொடுத்து மாலையைத் திருவடியில்
அணிந்து, பூவரும்பு போன்ற முகங்கொண்ட திருமகனை வாழ்த்தினர்.


               11
நூனிலங் கடந்தவந் நுண்பு கழ்க்கிசை
மீனிலந் திசையினோர் விரும்பிப் பாடலின்
வானிலங் கலந்துயர் மதிளின் பொன்முகங்
கானிலங் கொடியினோன் கனிகண் டானரோ.
 
நூல் நிலம் கடந்த அந் நுண் புகழ்க்கு இசை
மீன் நிலம் திசையினோர் விரும்பிப் பாடலின்,
வான் நிலம் கலந்து உயர் மதிளின் பொன் முகம்,
கான் நிலம் கொடியினோன், கனி கண்டான் அரோ.

     நூலின் வரம்பையெல்லாம் விஞ்சிய அந்த நுண்ணிய புகழுக்கு
இசையாக விண்மீன்களின் இருப்பிடமாகிய வானுலகத்தவரும்
விருப்பத்தோடு பாடிய வேளையில், மணத்துக்கு இருப்பிடமாகிய மலர்க்கொடியை உடையவனாகிய சூசை, வானுலகத்தோடு கலந்த
தன்மையாய் உயர்ந்து நின்ற மதிலின் பொன் போன்ற முகத்தைக்
கனிவோடு கண்டான்,

     'அரோ' அசைநிலை, மதிள் - மதில் என்பதன் கடைப் போலி

                12
தேனிரைத் தலர்ந்தபொற் குன்றச் சென்னியின்
மேனிரைத் தொழுகிய வெள்ளி யாறென
வானிரைத் துயர்மணி மாட நெற்றிகட்
கோனிரைத் தசைகொடிக் கோட்டம் யாதென்றான்.
 
"தேன் நிரைத்து அலர்ந்த பொற் குன்றச் சென்னியின்
மேல் நிரைத்து ஒழுகிய வெள்ளி ஆறு என,
வான் நிரைத்து உயர் மணி மாட நெற்றி கண்
கோல் நிரைத்து அசை கொடிக் கோட்டம் யாது?" என்றான்.