"தனித் திருத்
தகவோன் தந்த தனித்திறல் அவன் மாற்றார் மேல்
இனித் திருத்திடல் நன்று என்ன, எங்கு உண்ட பீலித்தேயர்
பனித் திருத் தடத்துத் தந்த பழ மறை பகைத்தார் என்ன,
முனித் திருத் திறத்த சஞ்சோன் மொய் செய, அளவு இல் மாய்ந்தார். |
"ஒப்பற்ற செல்வங்களெல்லாம்
ஒருங்கே கொண்ட உயர் கடவுள்
தனக்குத் தந்த தனிப்பட்ட ஆற்றலை அவ்வாண்டவனுக்குப் பகையாய்
அமைத்தவர் மீது இனி செலுத்துதல் நன்றென்று கருதி, இங்கு முன்
வாழ்ந்திருந்த பிலித்தேயர் அக்கடவுள் குளிர்ந்த திரு மலையாகிய
சீனயியில் தந்த பழைய வேதத்தைப் பகைத்தனர் என்று கண்டு,
சினங்கொண்ட திருத்திறம் படைத்த சஞ்சோன் போர் தொடுக்கவே,
அப்பிலித்தேயர் அளவின்றி மடிந்தனர்,
18 |
கதிர்படும்
வயலிற் செந்நெல் காய்த்தன நாளி லோர்நா
ளெதிர்படு நரிகண் முந்நூ றிவன்பிடித் திரண்டாய்ச் சேர்த்திப்
பொதிர்படும் வாலில் வாலைப் புணர்த்தலோ டெரிதீப் பந்தம்
பிதிர்படும் பொறிகள் சிந்தப் பிணித்திக னாட்டில் விட்டான். |
|
"கதிர் படும்
வயலில் செந் நெல் காய்த்தன நாளில், ஓர் நாள்
எதிர் படும் நரிகள் முந்நூறு இவன் பிடித்து, இரண்டாய்ச் சேர்த்து
பொதிர் படும் வாலில் வாலைப் புணர்த்தலோடு, எரி தீப் பந்தம்
பிதிர் படும் பொறிகள் சிந்தப் பிணித்து, இகல் நாட்டில் விட்டான். |
"கதிர் கொண்ட
வயலில் செந்நெல் காய்த்து விளைந்து கிடந்த
காலத்தில், ஒரு நாள் இவன் தன் கண்ணுக்கு எதிர்ப்பட்ட முந்நூறு
நரிகளைப் பிடித்து வந்து, அவற்றை இரண்டிரண்டாய்ச் சேர்த்து, மயிர்
அடர்ந்த ஒன்றின் வாலோடு மற்றொன்றின் வாலைச் சேர்த்துக்
கட்டியதோடு, எரியும் தீப்பந்தத்தை அக்கட்டின் நடுவே தெறித்து விழும்
தீப்பொறிகள் சிந்துமாறு சேர்த்துப் பிணித்து, அவற்றையெல்லாம்
அப்பகைவர் நாட்டில் பயிர்களிடையே துரத்தி விட்டான்.
|