பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்276

"கார்த் திரள் அனைய ஆர்த்த கதத்தொடு கனலும் விம்மிப்
போர்த் திரள் இயற்றினான், உள் புலத்து எழும் தாகம் ஆற்றா,
சூர்த் திரள் பயத்த தண்டம் சுனையின் ஊற்று என,
                                        என்பின் வாய்
நீர்த் திரள் ஓட, சால்பின் நிமலனை வாழ்த்தி உண்டான்.

     "கருமேகக் கூட்டம் போல் முழங்கிய சினத்தோடு நெருப்பும்
பிறக்குமாறு போரைத் திரளாகத் தொடர்ந்து செய்த சஞ்சோன், அதனால்
தன் உட் புலத்து எழும் தாகத்தைத் தாங்க மாட்டாமல், பகைவருக்கு
அச்சம் மிகுதியாக விளைவித்த தன் தண்டாயுதமே சுனையின் ஊற்றாக
அமைந்து, அவ்வெலும்பினின்று நீர்த்திரள் பாய்ந்து ஓடவே, ஆண்டவனை
வாழ்த்திய வண்ணமாய் அந்நீரை மிகுதியாக உண்டான்.

              தலை மயிர்த் திறனும் முடிவும்

     -- காய், -- காய், - மா, - மா, -- காய்

                      27
மலைமூழ்குந் திண்டோளான் மன்னார் வைகு மந்நகருள்
ளலைமூழ்குஞ் சுடர்போயோர் நாள்புக் கானென் றறிந்தன்னார்
விலைமூழ்கு மணிக்கோட்டக் கதவம் பூட்டி விடிந்தனபின்
கொலைமூழ்கு முயிர்ப்பழியைக் கொள்வ தென்னக்
                                   கூர்த்துவந்தார்.
 
"மலை மூழ்கும் திண்தோளான், மன்னர் வைகும் அந் நகருள்
அலைமூழ்கும் சுடர் போய் ஓர் நாள் புக்கானென்று அறிந்து,
                                            அன்னார்
விலை மூழ்கும் மணிக் கோட்டக் கதவம் பூட்டி, விடிந்தன பின்
கொலை மூழ்கும் உயிர்ப் பழியைக் கொள்வது என்னக் கூர்த்து
                                            உவந்தார்.

     "மலையை மூழ்கடிக்கும் உறுதியான தோள் கொண்ட சஞ்சோன்,
பகைவர் வாழும் அந்நகருக்குள் ஒரு நாள் கடலில் மூழ்கும் கதிரவன்
மறைந்து போனபின் வந்து புகுந்துள்ளான் என்று அறிந்து,
எவ்விலையையும் விழுங்கக் கூடிய மணிகள் பதித்த அக்கோட்டையின்
கதவைப் பூட்டி வைத்து, விடிந்த பின் கொலையில் மூழ்கடிப்பதன் மூலம்
அவன் உயிரைப் பழிவாங்கிக் கொள்வதென்று முடிவு செய்து மிகவே
மகிழ்ந்தனர்.