அறத் துறைகளுக்கெல்லாம்
இருப்பிடமான அவர்கள், நகரின் புறப்
பகுதியைக் கடந்து போய், நகரத்து வாயிற் காவலர் திறமாகக் காக்கும்
இடத்துப் புகுந்தனர்; தேர்ந்த நூல்களைக் கற்பதற்கென்று அமைந்த அப்
பகுதியையும் கடந்து, நகருக்குள் சென்று சேர்ந்தனர்.
42 |
வேலை மாமணிப்
பீடிகை வீதியுஞ்
சாலை பூம்புகை வீதியுந் தாண்டிநற்
பாலை யாழிசை பாடினர் வீதியுண்
மாலை மாடத்த ழுங்குரற் கேட்டனர். |
|
வேலை மா மணிப்
பீடிகை வீதியும்,
சாலை பூம் புகை வீதியும் தாண்டி, நல்
பாலை யாழ் இசை பாடினர் வீதியுள்
மாலை மாடத்து அழும் குரல் கேட்டனர். |
கடலிற் கிடைக்கும்
சிறந்த மணிகளை விற்கும் கடைத் தெருவையும்,
சாலை வரையிலும் மெல்லிய நறுமணப் புகை மண்டிய வீதியையும் கடந்து,
நல்ல பாலை யாழை மீட்டி இசைப் பாடுவோர் வீதியினுள் அழகிய
மாளிகையினின்று வரும் அழுகைக் குரலைக் கேட்டனர்.
43 |
திரிசு மந்தில
தீபமொத் தாவிபோ
யரிசு மந்தவ ணைக்கிடந் தன்னைசூழ்
வரிசு மந்த விளமயின் மானவைந்
தெரிசு மந்தக ணாரழு தேங்கினார். |
|
திரி சுமந்து
இல தீபம் ஒத்து, ஆவி போய்,
அரி சுமந்த அணைக் கிடந்த அன்னை சூழ்
வரி சுமந்த இள மயில் மான, ஐந்து
எரி சுமந்த கணார் அழுது ஏங்கினர். |
திரியைக் கொண்டிராத
விளக்குப் போல், உயிர் பிரிந்து சிங்க
உருவங்கள் காலாகத் தாங்கி நின்ற மெத்தை மேல் கிடந்த தம்
அன்னையைச் சூழ்ந்து, நெருப்பைச் சுமந்த தன்மையாய்ச் சிவந்த கண்களை
உடைய மகளிர் ஐவர், சித்திரக் கோலத்துத் தோகையைத் தாங்கிய இள
மயில்கள் போல், அழுது ஏங்கிக் கொண்டிருந்தனர்.
|