பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்288

            46
தாயெ ழுந்துவ ரந்தரு கைபெறா
தாயெ ழுந்தவி யப்பில னைவருந்
தூயெ ழுந்தக ளிப்பொடு துள்ளிவான்
மீதெ ழுந்த விமலனை வாழ்த்தினார்.
 
தாய் எழுந்து, வரம் தரு கை பெறாது,
ஆய் எழுந்த வியப்பில், அனைவரும்
தூய் எழுந்த களிப்பொடு துள்ளி, வான்
மீது எழுந்த விமலனை வாழ்த்தினார்.

     தாய் உயிர் பெற்று எழக் கண்டு, அவ்வரம் தந்த கை எதுவென்று
அறியப் பெறாமல், ஆராயுந் தோறும் பொங்கி எழுந்த வியப்பினால்,
அனைவரும் தூய்மை கலந்து எழுந்த மகிழ்ச்சியோடு துள்ளி, வானத்தில்
எழுந்தருளியுள்ள குற்றமற்ற ஆண்டவனை வாழ்த்தினர்.

               47
விண்ணு ளோர்பணி வேலையைக்
                       கொள்பவர்
மண்ணு ளோர்மிடி மாண்புற வந்நகர்க்
கண்ணு ளோர்வறி யோரெனக் கையிரந்
தெண்ணு ளோர்பகல் மூன்றிருந் தாரரோ.
 
விண் உளோர் பணி வேலையைக் கொள்பவர்,
மண்ணுள் ஓர் மிடி மாண்பு உற, அந் நகர்க்
கண் உளோர் வறியோர் என, கை இரந்து,
எண்ணுள் ஓர் பகல் மூன்று இருந்தார் அரோ.

     விண்ணிலுள்ள வானவர் பணி செய்யும் தொழிலைத் தமது
உரிமையாகக் கொண்டிருந்த அவர்கள், இம்மண்ணுலகில் வறுமை
என்னும் ஒன்று தம்மால் மாண்பு அடையுமாறு, அந்நகரில்
உள்ளவர்களாகிய பிற வறியவரைப் போல், தாமும் கையால் இரந்து
உண்டு, எண்ணிக்கை அளவில் ஒரு மூன்று நாட்கள் இருந்தனர்.

     'அரோ' அசை நிலை.