பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்289

               48
வருந்திக் கையொடு கால்வழங் காதனள்
பொருந்திக் கைக்கொடை யுய்த்தவர் பூமுகந்
திருந்தித் தீட்டிய தேவருட் கண்டென்னோ
யிருந்திற் றாற்றும ருந்நிலை யோவென்றாள்.
 
வருந்திக் கையொடு கால் வழங்காதனள்,
பொருந்திக் கைக் கொடை உய்த்து, அவர் பூ முகம்
திருந்தித் தீட்டிய தே அருள் கண்டு, "என் நோய்
இருந்து இற்று ஆற்றும் மருந்து இலையோ?" என்றாள்.

     கையும் காலும் வழங்காத ஒருத்தி அதனால் வருந்தி, மனம்
பொருந்தித் தன் கையால் கொடை செலுத்தி, அவர்தம் அழகிய முகத்தில்
திருத்தமாய்த் தீட்டி வைத்தது போல் அமைந்து கிடந்த தெய்வ அருளைக்
கண்டு கொண்டு, "என் நோயினின்று நீங்குமாறு செய்யும் மருந்து உம்மிடம்
இல்லையோ?" என்றாள்.

             49
அணங்கு தேவம கன்முகத் தாறுமென்
றணங்கு பேயுற வார்தவத் தோனறைந்
தணங்கு தீர்ந்தவள் வாய்ப்புகழ்க் கஞ்சின
ரணங்கு மின்னென வாங்கொளித் தாரரோ.
 
"அணங்கு தேவ மகன் முகத்து ஆறும்" என்று,
அணங்கு பேய் உற ஆர் தவத்தோன், அறைந்து,
அணங்கு தீர்ந்து, அவள் வாய்ப் புகழ்க்கு அஞ்சினர்,
அணங்கு மின் என ஆங்கு ஒளித்தார் அரோ.

     பேய்கள் அச்சங் கொள்ளும் அளவிற்கு நிறைந்த தவத்தோனாகிய
சூசை, "இந்நோய் இத்தெய்வ மகன் முகத்தால் ஆறும்" என்று சொல்லி,
அந்நோய் தீர்ந்ததும், அவள் வாயால் வரும் புகழுக்கு அஞ்சியவராய்,
அச்சம் தரும் மின்னல்போல் அங்கிருந்து மறைந்தனர்.

             50
மாலை வாய்மணம் போலவும் வாசபூஞ்
சோலை வாய்நிழல் போலவுந் தூயறச்
சாலை வாயினர் தங்கிய முப்பகற்
காலை வாய்ந்தது காசறக் காசையே.