பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்291

பதினெட்டாவது

சீனயி மாமலை காண்படலம்

     இறைவன் மோயிசனுக்குப் பத்துக் கட்டளை அருளிய சீனயி
என்னும் சிறந்த மலையைத் திருக்குடும்பத்தினர் அடுத்துச் சென்றதைக்
கூறும் பகுதி.

                    சீனயி மலைச் சிறப்பு

      - விளம், - விளம், - மா, கூவிளம்.

              1
கோபுர மணியொளி குன்றப் பேரகழ்
நூபுரம் புலம்பமேற் கொடிநு டங்கநீண்
மாபுரஞ் சிறுமையின் வாடப் போயினார்
மீபுரங் குடியென மாட்சி மேன்மையார்.
 
கோபுர மணி ஒளி குன்ற, பேர் அகழ்
நூபுரம் புலம்ப, மேல் கொடி நுடங்க, நீள்
மா புரம் சிறுமையின் வாட, போயினார்,
மீ புரம் குடி என மாட்சி மேன்மையார்.

     மேலுலகத்துக் குடிமக்கள் என்ற தன்மையாக மாட்சியில் மேம்பட்ட
அத் திருக்குடும்பத்தினர், கோபுர வாயிலிற் பதித்த மணிகள் ஒளி குன்றவும்,
பெரிய அகழி நீர் சிலம்பொலிபோலப் புலம்பவும், கோபுரத்தின் மேலுள்ள
கொடி துவளவுமாகக் காசை என்னும் அப்பெரிய நகரம் சிறுமையில்
வாடுமாறு நீங்கிச் சென்றனர்.

     பெருமை + அகழ் - பெரு + அகழ் - பேரு + அகழ் - பேர் + அகழ்
= பேரகழ்.

                  2
கொன்றெளித் தெழுதிய தெனநற் கொள்கையார்
மின்றெளித் தெழுதிய செல்வம் விட்டெனப்
பொன்றெளித் தெழுதிய புரமு நாடும்விட்
டின்றெளித் தெழுதிய விவரன் றேகினார்.