பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்294

     மின்னல் போன்ற தன்மையுள்ள அவ்விருவரும், பொன் போல்
ஒளிரும் திருமகனின் இரு வடிகளையும் விழுந்து தொழவே, சூசை தன்
உள்ளத்துள் எண்ணிப் பார்த்து, பின் அவர்களை நோக்கி, "நீங்கள் யார்?
வந்த காரியம் சொல்லுங்கள்" என்றதும், நல்ல தன்மையுள்ள சட்சதன்
என்னும் வானவன் சூசையை அணுகித் தொழுது, பின் வருமாறு
சொன்னான்:

                  7
திரைநிரை மணிகொழித் தொளிசெய் சேண்
                              செலும்
வரைநிரை வளர்நலங் காக்க வான்றொழும்
விரைநிரை மலருரு வேய்ந்த விப்பிரா
னுரைநிரை வதிந்தநா மென்ன வோதினான்
 
"திரை நிரை மணி கொழித்து, ஒளி செய் சேண்
                                  செலும்
வரை நிரை வளர் நலம் காக்க, வான் தொழும்
விரை நிரை மலர் உரு வேய்ந்த இப் பிரான்
உரை நிரை, வதிந்த நாம்" என்ன ஓதினான்.

     "திரையைக் கொண்ட அருவி வரிசையாக இரத்தினங்களைக்
கரையில் ஒதுக்கிவைக்க, ஒளி பொருந்திய வானத்தை எட்டும்
இம்மலையில் வரிசையாகக் கிடந்த செல்வங்களைக் காக்கும் பொருட்டு,
வானுலகம் தொழத்தக்க மணம் பொருந்திய தாமரை மலரின் உருவம்
தாங்கி அவதரித்த இவ்வாண்டவனின் சொல்லுக்கு அமைய, இங்கே
தங்கியிருப்போர் நாங்கள்" என்றான்.

     'திரை' மலை என்ற சார்பு பற்றி அருவிக்கு ஆகு பெயராயிற்று.

           8
எம்பர நாயக னேவ லாலுல
கம்பர நான்கையு மமரர் காத்தலி
லும்பர விம்மலைக் குரிமை யாதெனாப்
பம்பர வளன்சொல வமரன் பன்னினான்.
 
"எம் பர நாயகன் ஏவலால், உலகு
அம்பரம் நான்கையும் அமரர் காத்தலில்,
உம்பர இம் மலைக்கு உரிமை யாது?" எனாப்
பம்பர வளன் சொல, அமரன் பன்னினான்.