பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்295

     "எமது பரம நாயகனாகிய ஆண்டவன் ஏவலால், உலகத்தையும்
அதன் திசைகள் நான்கையும் வானவரே காத்து வரும் முறையிடையே,
வானளாவிய இம்மலைக்குத் தனி உரிமை வந்த விதம் யாது?" என்று
பம்பரம் போல் கறங்கிய ஆசையோடு சூசை வினவவே, சட்சதன்
என்னும் அவ்வானவன் இதனைச் சொல்லினான் :


             9
பானயி லுருக்கொடு பரம னெய்திய
கானயில் மலர்முடிக் காய காட்சியான்
மீனயில் வானினு மிகப்பு கழ்ந்தன
சீனயி மாமலைச் சிறப்பிஃ தாமரோ
 
"பான் அயில் உருக் கொடு பரமன் எய்திய
கான் அயில் மலர் முடிக்கு ஆய காட்சியால்
மீன் அயில் வானினும் மிகப் புகழ்ந்தன
சீனயி மாமலைச் சிறப்பு இஃது ஆம் அரோ.

     "கதிரவன் போன்ற அழகிய உருவத்தோடு ஆண்டவனே இங்கு
வந்தடைந்ததனாலும், அழகிய மலர்களைக் கொண்ட காடு அடர்ந்த
இம்மலையின் உச்சியில் நின்று தந்த காட்சியாலும், விண்மீன்களைக்
கொண்ட அழகிய வானுலகைக் காட்டிலும் மிகவே புகழப்படுவதாகிய
சீனயி என்ற பெரிய மலையின் சிறப்பு இதுவாகும்.

     'அரோ' அசைநிலை.

                  10
தனத்திடை யெழுத்தென ஞானத் தன்மையான்
மனத்திடை யெழுதிய மறையி னூல்பினர்
கனத்திடை ஒலியெழக் கல்லின் றீட்டிய
புனத்திடைக் குளிர்மலைப் பொலிவி தாமரோ.
 
"தனத்திடை எழுத்து என, ஞானத் தன்மையான்
மனத்திடை எழுதிய மறையின் நூல், பினர்,
கனத்திடை ஒலி எழ, கல்லின் தீட்டிய
புனத்திடைக் குளிர் மலைப் பொலிவு இது ஆம் அரோ.

     "ஞானமே வடிவான ஆண்டவன் முற்காலத்தில் மானிடர்
மனத்துள்ளே இயல்பாக எழுதி வைத்த வேத நூல் ஒழுங்கு முறையை,
பிற்காலத்தில், மேகத்தினின்று முழக்கம் தோன்ற, பொன்னில் பொறித்த
எழுத்துப் போலக் கல்லில் எழுதித் தந்தான். புன்செய்க்
கொல்லைகளிடையே குளிர்ந்து தோன்றும் இம்மலையின் பொலிவுக்குக்
காரணம் இதுவாகும்.