11 |
ஏர்கெழு
மணிவள ரெசித்து நீக்கலிற்
கார்கெழு குவட்டுவான் கலந்த விவ்வரை
நேர்கெழு யூதர்தந் நிரைத்த சேனைகள்
பார்கெழு வணியெனப் பரப்பி நின்றவே. |
|
"ஏர் கெழு மணி
வளர் எசித்து நீக்கலின்,
கார் கெழு குவட்டு வான் கலந்த இவ் வரை,
நேர் கெழு யூதர் தம் நிரைத்த சேனைகள்,
பார் கெழு அணி எனப் பரப்பி நின்றவே. |
"அழகு நிறைந்த
மணிகள் மிகுதியாகக் கொண்டுள்ள எசித்து
நாட்டை விட்டு வருகையில், நேர்மை நிறைந்த யூதர்களின்
அணியணியான சேனைகள், மேகங்கள் நிறைந்த தன் உச்சி வானத்தை
அளாவ நின்ற இம்மலையின் அடியில், இவ் வுலகிற்குச் சிறந்ததோர்
அணிகலன் போல் பரந்து நின்றன.
'வரை' என்று
முன் சொல்லிப் பின் 'பார்' எனச் சுட்டியமையால்,
அதனை வரையின் அடியென ஆகு பெயராகக் கொள்க.
12 |
தேனிமிர்
தொத்தணி திமிசுஞ் சாந்தமும்
வானிமிர் கோட்டணி வகுத்த மால்வரை
மேனிமிர் நாயகன் விளிப்ப யூதர்தங்
கோனிமிர் மோயிசன் குவட்டி லேறினான். |
|
'தேன் நிமிர்
தொத்து அணி திமிசும் சாந்தமும்,
வான் நிமிர் கோட்டு, அணி வகுத்த மால்வரை
மேல், நிமிர் நாயகன் விளிப்ப, யூதர்தம்
கோல் நிமிர் மோயிசன் குவட்டில் ஏறினான். |
"வானளாவ உயர்ந்த
தன் உச்சிமீது தேன் நிறைந்த
பூங்கொத்துக்களை அணிந்து நின்ற வேங்கை மரங்களும் சந்தன மரங்களும்
வரிசையாக அமைந்து நின்ற இப்பெரிய மலைமேல் நின்று கொண்டு,
யாவற்றிலும் மேம்பட்ட ஆண்டவன் தன்னை அழைக்க, யூதரின் ஆட்சியை
நிமிரச் செய்த மோயிசன் அதன் உச்சிமீது ஏறிச் சென்றான்.
|