பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்299

                     16
கண்டகா லினியனவு மெவர்க்குங் காண்டற் கரியனவு
முண்டகா லாங்கன்னா னுண்ட வின்ப முயர்வீட்டைக்
கொண்டகா லதற்குவமை குணிப்ப ரல்லாற்
                              கொங்கலர்க்கோல்
விண்டகால் வரம்பூண்டோய் மதியா ரிங்கண் மேதினியார்.
 
"கண்ட கால் இனியனவும், எவர்க்கும் காண்டற்கு அரியனவும்
உண்ட கால், ஆங்கு அன்னான் உண்ட இன்பம், உயர் வீட்டைக்
கொண்ட கால் அதற்கு உவமை குணிப்பர் அல்லால், கொங்கு
                                         அலர்க் கோல்
விண்ட கால் வரம் பூண்டோய், மதியார் இங்கண், மேதினியார்.

     "மணம் பொருந்திய பூங்கொடி மலர்ந்த போதே அதனோடு
வரங்களும் பூண்ட சூசையே, கண்டடைந்தபோது இனிமை பயப்பனவும்,
எவர்க்கும் காண்பதற்கு அரியனவுமாகிய அவ்வானுலக இன்பத்தை நுகர்ந்த
போது அம் மோயிசன் அடைந்த இன்பத்தை, இவ்வுலகத்தார் உயர்ந்த
வான் வீட்டை அடைந்த போது அதற்கு ஓர் ஒப்புமை கருதிக் காண்பாரே
அல்லாமல் இங்கிருந்து கொண்டே அதனை மதிப்பிட இயலாதவர் ஆவார்.

                       17
முறைகெழுநற் கேள்வியினூற் புலமை மிக்க மோயிசனாங்
குறைகெழுநற் கனத்துலகங் கடந்து நிற்ப வொளியணிவான்
றுறைகெழுநற் காட்சியினோ டின்பப் பவ்வந் தோய்ந்துவப்ப
மறைகெழுநற் பயனுரைத்த விறைவ னிச்சொல் வழங்கினனால்,
 
"முறை கெழு நல் கேள்வியின் நூல் புலமை மிக்க மோயிசன், ஆங்கு
உறை கெழு நல் கனத்து உலகம் கடந்து நிற்ப, ஒளி அணி வான்
துறை கெழு நல் காட்சியினோடு இன்பப் பவ்வம் தோய்ந்து உவப்ப,
மறை கெழு நல் பயன் உரைத்த இறைவன் இச் சொல் வழங்கினன் ஆல்.