பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்3

     கோவிலை மலையாகவும் புகையை மேகமாகவும் கொள்க. 'உரைத்
தூது' என்பதனைத் 'தூதுரை' என மாற்றுக.

 

                       4

கான்வயிறார் பூங்கொடியோ னுறங்குங் காலை கதிர்தும்மி
மீன்வயிறா ருருக்காட்டி விண்ணோ னெய்தி விரைக்கொடியோ
யூன்வயிறார் வேல்வேந்த னிளவற் கோற லுள்ளினனீ
தேன்வயிறா ரிப்பதி நீத் தெசித்து நாட்டைச் செல்கவென்றான்.

 
கான் வயிறு ஆர் பூங் கொடியோன் உறங்குங் காலை, கதிர் தும்மி,
மீன் வயிறு ஆர் உருக் காட்டி விண்ணோன் எய்தி, "விரைக்
                                           கொடியோய்,
ஊன் வயிறு ஆர் வேல் வேந்தன் இளவற் கோறல் உள்ளினன்; நீ
தேன் வயிறு ஆர் இப் பதி நீத்து, எசித்து நாட்டைச் செல்க"
                                           என்றான்.

     தன்னுள் வாசனைநிறைந்த மலர்க்கொடியை உடையவனாகிய சூசை
உறங்கிக் கொண்டிருந்த வேளையில், கதிரைப் பொழிந்து, விண்மீனிடத்து
நிறைந்து காணும் ஒளி உருவம் காட்டி அவ் வானவன் வந்து நின்று,
"வாசனை கொண்ட மலர்க்கொடியை உடையவனே, பகைவரின் ஊனைத்
தன்னிடத்துக் கொண்ட வேலை உடைய மன்னன் சிறுவனைக் கொல்ல
நினைந்துள்ளான்; எனவே, தன்னிடத்துத் தேன் நிறைந்துள்ள இந்நகரை
விட்டு நீங்கி, எசித்து நாட்டிற்குச் செல்வாயாக" என்றான்.

     'நாட்டிற்குச் செல்க' என்பது, 'நாட்டைச் செல்க' என்று வந்தது
உருபு மயக்கம். வேந்தன் - எரோதன், அவன் குழந்தை நாதனைக்
கொல்ல நினைந்தது, 25-வது, குழவிகள் வதைப் படலம் காண்க.

 

                       5

அழற்குளித்த பைந்தாதோ கண்பாய் வேலோ வகல்வாயுட்
புழற்குளித்த செந்தீயோ வுருமோ கூற்றோ பொருவின்றி
நிழற்குளித்த வுருவானோன் கொடுஞ்சொற் கேட்டு
                                  நெடுங்கடனீர்ச்
சுழற்குளித்த மனஞ்சோர்ந்து வளனப் பணியைத்
                                  தொழுதுளைந்தான்.