27 |
சிலைவளர்
நாணிற் கையின் சேர்ந்தடர்ந் திறுகப் பின்னிக்
கவைள ருணர்வி னோங்கிக் கள்ளுண்டார் தலையி னாடி
வலைவளர் மகளிர் நெஞ்சின் வெயிற்பக லிருளிற் றாகி
யலைவள ரொலயி னார்க்கு மலர்முகத் தலர்ந்த காவே. |
|
சிலை வளர் நாணின்
கையின் சேர்ந்து அடர்ந்து இறுகப் பின்னி,
கலை வளர் உணர்வின் ஓங்கி, கள் உண்டார் தலையின் ஆடி
வலை வளர் மகளிர் நெஞ்சின் வெயில் பகல் இருளிற்று ஆகி,
அலை வளர் ஒலியின் ஆர்க்கும், அலர் முகத்து அலர்ந்த காவே. |
தன் முகமெல்லாம்
பூக்கள் விரிந்து நின்ற அச்சோலை, வில்லிற்
பொருந்திய நாண் போன்ற கிளைகளாகிய கைகளால் ஒன்றுசேர
அடர்த்தியாக இறுகப் பின்னிக் கொண்டு, கல்வியால் வளர்ந்த உணர்வு
போல் உயர்ந்து நின்று, கள் உண்டவர் தலை போல் அசைந்தாடி,
விலையின் பொருட்டுக் காமம் வளர்க்கும் மகளிர் நெஞ்சு போல் வெயில்
நிறைந்த பகற் பொழுதிலும் இருளைக் கொண்டதாகி, மொய்த்த
வண்டுகளாலும் தங்கிய பறவைகளாலும் கடல் ஒலி போல் முழங்கிக்
கொண்டிருக்கும்.
28 |
பூவிடை யளிக
டுஞ்சப் பொதும்பிடை மயில்க டுஞ்சக்
கோவிடை யன்னந் துஞ்சக் கொம்பிடைக் குயில்க டுஞ்ச
மாவிடை முசுக டுஞ்ச மருளிடை யிரவு டுஞ்ச
நாவிடை யுரைக டுஞ்ச நலமெலாந் துஞ்சுங் காவே. |
|
பூவிடை அளிகள்
துஞ்ச, பொதும்பிடை மயில்கள் துஞ்ச,
கோவிடை அன்னம் துஞ்ச, கொம்பிடைக் குயில்கள் துஞ்ச,
மாவிடை முசுகள் துஞ்ச, மருளிடை இரவு துஞ்ச,
நாவிடை உரைகள் துஞ்ச, நலம் எலாம் துஞ்சும் காவே. |
வண்டுகள் மலர்களில்
துயிலவும், மரப் பொந்துகளில் மயில்கள்
துயிலவும், தடாகத்தில் அன்னங்கள் துயிலவும், கொம்புகளில் குயில்கள்
துயிலவும், மாமரங்களில் கருங்குரங்குகள் துயிலவும், மயக்கத்திடையே
இரவு துயிலவும், நாவுகளில் நின்று எழும் பேச்சுகளெல்லாம் துயிலவுமாக,
இரவுப் பொழுதில் அச்சோலையின் நலங்கள் எல்லாமே உறங்கிக் கிடக்கும்.
|