பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்308

     தீயின் நிறத்தோடு ஒத்த பவளம் போன்ற செந்நிறக் கிளைகளோடு,
மரகதம் போன்ற பசுமையான இலைகள் செறிந்து, தூய வெண்ணிறமுள்ள
முத்துப் போன்ற அரும்புகளும் தூய மாணிக்கம் போன்ற செந்நிற
மலர்களும் கொண்டு, காய்கள் வெள்ளி போன்ற நிறத்தோடு விளங்க
பொன்னிறமான கனிகளும் காய்த்து, மேன்மையான நிறமுள்ள அந்த
மரத்தின் அழகு வானுலகில் வளரும் அழகுக்கு நிகராயிற்று.

     பொன் என்ற பொதுப் பெயர், கரும் பொன் வெண் பொன் செம்
பொன் எனக் கொண்ட அடைமொழி ஆற்றலால், முறையே, இரும்பையும்
வெள்ளியையும் பொன்னையும் குறிக்கும், தீ, மீ என்பன, எதுகை
இன்னோசைப் பொருட்டு, தீய், மீய் என விரிந்து நின்றன. 'போன்றே'
என்ற விடத்து, ' போன்றது' என்பது, 'போன்று' எனக் கடைக்குறை
விகாரமாயிற்று.

                    31
நளிவளர் மலர்க்கோற் சூசை நயந்திவை வியந்து
                                    நோக்கிற்
களிவள ருவப்பு மாறக் கதத்தவான் றிசைக ணான்கில்
வளிவளர் பகையில் வீச மரங்குழைந் தழுங்கி வாடி
வெளிவளர் சினைக ணூறி வீழ்வது போலக் கண்டான்.
 
நளி வளர் மலர்க் கோல் சூசை நயந்து இவை வியந்து
                                       நோக்கில்,
களி வளர் உவப்பு மாற, கதத்த வான் திசைகள் நான்கில்
வளி வளர் பகையில் வீச, மரம் குழைந்து அழுங்கி வாடி,
வெளி வளர் சினைகள் நூறி வீழ்வது போலக் கண்டான்.

     குளிர்ச்சி மிக்க பூங்கோலைத் தாங்கிய சூசை அவற்றை
விருப்பத்தோடும் வியப்போடும் பார்த்துக் கொண்டிருக்கையில், அவனது
களிப்போடு கூடிய மகிழ்ச்சி மறையுமாறு, சினந்தது போன்ற வானத்தின்
நான்கு திசைகளினின்றும் வளர்ந்த பகை போல் காற்று வீசியடிக்கவே,
அம்மரம் குழைந்து வருந்தி வாடி, வானவெளியில் பரந்து நின்ற கிளைகள்
ஒடிந்து வீழ்வதுபோலக் கண்டான்.