பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்309

                    32
படம் புரை பொறித்த மாமை பட்டற விலையு மின்றி
விடம் புரை பட்ட காலால் வியன்றருக் கெட்ட தென்னா
வடம்புரை தவத்தைப் பூண்டோன் மதித்துளத் தனுங்குங்
                                         காலை
சடம் புரை யனிலங் கையாற் றகைத்தென நின்ற தன்றோ.
 
படம் புரை பொறித்த மாமை, பட்டு, அற, இலையும் இன்றி
விடம் புரை பட்ட காலால், வியம் தரு, கெட்டது என்னா,
வடம் புரை தவத்தைப் பூண்டோன், மதித்து, உளத்து அனுங்கும்
                                              காலை,
சடம் புரை அனிலம் கையால் தகைத்து என நின்றது அன்றோ.

     அப்பெரிய மரம் பட்டுப் போய், சித்திரப் படம் போல் பொறித்த தன்
அழகு நீங்குமாறு, நஞ்சுபோல் தன் மேல் வீசியடித்த காற்றினால் இலையும்
இல்லாமல் கெட்டொழிந்ததென்று கருதி, முத்துவடம் போல் தவத்தை
அணிந்து கொண்டவனாகிய சூசை தன் உள்ளத்தில் வருந்தியபோது,
கொடுமையே போன்ற அக்காற்று கையினால் தடுக்கப்பட்டதுபோல் நின்று
போயிற்று.

     'அன்றோ' அசை நிலை.

                    33
அற்றதென் றலைந்த சாகி யனிலமற் றொழிந்த போது
செற்றதென் றரிந்த கீடந் தீண்டிய கனிகளல்லால்
மற்றதென் றொன்றுங் குன்றா வனப்பெழீஇ
                               யிலங்கச் சூசை
யுற்றதென் றுணர்த்தி யென்றா னுவந்துசட் சதனுஞ்
                               சொல்வான்.
 
அற்றது என்று அலைந்த சாகி, அனிலம் அற்று ஒழிந்தபோது
செற்றது என்று அரிந்த கீடம் தீண்டிய கனிகள் அல்லால்
மற்றது என்று ஒன்றும் குன்றா வனப்பு எழீஇ இலங்க, சூசை,
"உற்றது என்று உணர்த்தி" என்றான். உவந்து சட்சதனும்
                                          சொல்வான் :

     அழிந்தொழிந்தது என்ற தன்மையாய்க் காற்றால் அலைந்த அம்மரம்,
காற்று நின்றொழிந்த போது, சினங் கொண்டது போலக் குடைந்த புழுக்கள்
தீண்டிய கனிகளேயல்லாமல் மற்றது என்று ஒன்றும் கெடாத அழகோடு
எழுச்சி கொண்டு விளங்கவே, சூசை, "நேர்ந்தது என்னவென்று
தெரிவிப்பாய்" என்றான் : சட்சதனும் மகிழ்ந்து பின்வருமாறு சொல்வான் :