பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்31

     "வேதம் என்னும் கொடி சேர்ந்து படரும் கொழுகொம்பு
போன்றவனே, இவ்வாண்டவன் அஞ்சுபவன் தானோ, நீதியை அழகிய
அணிகலன் போல் கொண்டு விளங்கும் வீரத்தில் குறைபடுபவன்
தானோ, உலகத்தில் யாவரும் நடுங்குமாறு ஆண்மையில் மேலோங்கி
நிற்பவன்தானோ என்றெல்லாம், நீ அடைய எண்ணிய எசித்து நாட்டார்
முற்காலத்தில் மடிந்து கெடும்படி உணர்ந்தனர்.

     ஞாலத்து+யாவரும் - 'ஞாலத் தியா வரும்' என, யகரத்தின் முன்
குற்றியலுகரம் இகரமாயிற்று. வரும் பாடலில், 'வருத்தியான்' என்பதும் அது.
'கொல்' இடையே அசைநிலை. துஞ்சுவான் - 'துஞ்ச' என்று பொருள்படும்
'வான்' ஈற்று வினையெச்சம்.

                       20
நினைந்தயா வையுநி னைந்த நிலைக்கவை நிகழ்த்துந் தன்மை
புனைந்தமா மதுகை காட்டப் புணர்ந்தபுற் சூரற் கொண்டு
முனைந்தகா லிவன்முன் னாளின் முரிந்தெசித் தஞ்சி வாட
வனைந்தயா வையுநி னக்கேன் வகுத்தியா னுரைப்ப லென்றான்.
 
"நினைந்த யாவையும் நினைந்த நிலைக்கு அவை நிகழ்த்தும் தன்மை
புனைந்த மா மதுகை காட்ட, புணர்ந்த புன் சூரல் கொண்டு
முனைந்த கால், இவன் முன் நாளில், முரிந்து எசித்து அஞ்சி வாட
வனைந்த யாவையும், நினக்கு ஏன் வகுத்து யான் உரைப்பல்?"                                            என்றான்.

     "தான் நினைந்த யாவற்றையும் நினைந்த நிலைக்கு ஏற்ப நிகழ்த்தும்
தன்மை பொருந்திய தன் பெரு வல்லமையைக் காட்டவென்று,
இவ்வாண்டவன் முற்காலத்தில் கைக்கொண்ட ஓர் அற்பப் பிறம்பைக்
கொண்டு முனைந்தபோது, எசித்து நாடு அஞ்சி வாடிக் கெடும்படிச் செய்த
யாவற்றையும், நான் ஏன் உனக்கு வகுத்துக் கூற வேண்டும்?" என்றான்.

     உரைப்பல் : 'உரைப்பேன்' என்ற சொல், 'உரைக்க வேண்டும்'
என்ற பொருளில் நின்றது; அது, 'நீயே அறிவாய்' என்ற கருத்தில் வந்தது.
'முரிந்து எசித்து அஞ்சி வாட, என்பதனை, 'எசித்து அஞ்சி வாடி முரிய'
என மாற்றிப் பொருள் கொள்க. இங்குத் தொடரும் செய்தி, ப, ஏ.,
யாத்திராகமம், 7-14 அதிகாரங்கள் காண்க.