பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்32

                      21
வீங்கெழுந் துயரு ளாற்றா வெதிர்ப்பெழும் புணரி நெஞ்சிற்
பூங்கெழுங் கொடியோன் சொல்லிப் புரையற வுணர்ந்த தேனு
மீங்கெழுந் தெளிய னென்ன விரிந்தநா யகனை வாழ்த்த
வாங்கெழுந் திறலி னாண்மை யறைதியென் றறைந்தான்
                                         வானோன்.
 
வீங்கு எழும் துயருள் ஆற்றா வெதிர்ப்பு எழும் புணரி நெஞ்சின்,
பூங் கெழுங் கொடியோன், "சொல்லிப் புரை அற உணர்ந்ததேனும்,
ஈங்கு எழுந்து, எளியன் என்ன இரிந்த நாயகனை வாழ்த்த,
ஆங்கு எழும் திறலின் ஆண்மை அறைதி" என்று, அறைந்தான்                                              வானோன்.

     பூக்கள் நிறைந்த கொடியைத் தாங்கிய சூசை, பெருகி எழும்
துயரினிடையே தணியாத கலக்கம் கொண்ட கடல் போன்ற நெஞ்சத்தோடு,
"இச்செய்தி சொல்லக் கேட்டுக் குற்றமற உணர்ந்ததாய் இருப்பினும்,
இவ்வுலகிற்கு எழுந்தருளி வந்து, எளியவன்போல அலைந்த ஆண்டவனை
வாழ்த்தியது போல் அமையுமாறு, அங்கு உயர்ந்து தோன்றும் இவனது
ஆற்றல் வாய்ந்த ஆண்மையை நீயும் சொல்வாய்" என்றான். எனவே,
வானவன் பின்வருமாறு தொடர்ந்து கூறினான்.

                   22
பேரவோங் கியவெற் புச்சி பிளந்தவிண் ணசனி யேறு
நேரவோங் கடலிற் சீற்ற நெறித்தருள் வணங்காச்
                                    சென்னிப்
பாரயோ னென்பா னாதன் பணித்தநற் பூசை செய்யா
வீரயோ சத்தி யூதர் விலக்கிமிக் கல்லற் செய்தான்.
 
"பேர ஓங்கிய வெற்பு உச்சி பிளந்த விண் அசனி ஏறு
நேர, ஓங்கு அடலின் சீற்றம் நெறித்து, அருள் வணங்காச்                                         சென்னிப்
பாரயோன் என்பான், நாதன் பணித்த நல் பூசை செய்யா
வீரயோகத்து யூதர் விலக்கி, மிக்கு அல்லல் செய்தான்.

     "உயர்ந்த மலையின் உச்சி பெயருமாறு விழுந்து பிளந்த மேகத்தின்
இடியேறு போல, தன்பால் ஓங்கிய வல்லமையால் சினம் பொங்கி,
அருளோடு வணங்காத தலையை உடைய பாரயோன் என்னும் எசித்து
மன்னன், ஆண்டவன் கட்டளையிட்ட நல்ல வழிபாட்டைச் செய்யாதவாறு
வீரத்தின் உயர்ச்சிக் கொண்ட யூதர்களைத் தடுத்து, மிகுதியாகத் துன்பம்
செய்தான்.

     இடியேறு - ஆண் இடி : பேரிடி.