44 |
நீங்கி
யாயின யாவையு நீங்கில
ளோங்கி யார்வமு ணர்ந்துடுப் பூண்டனள்
பாங்கி யாழிள கிப்பரி வோதைகொண்
டேங்கி னாலென வேங்கியி யம்பினாள். |
|
நீங்கி, ஆயின
யாவையும் நீங்கு இலள்
ஓங்கி, ஆர்வம் உணர்ந்து, உடுப் பூண்டனள்,
பாங்கு யாழ் இளகிப் பரி ஓதை கொண்டு
ஏங்கினால் என ஏங்கி, இயம்பினாள் : |
அங்கிருந்து
நீங்கியும், விண்மீன்களை முடியாக அணிந்த மரியாள்,
அங்கு நிகழ்ந்த யாவும் தன் மனத்தை விட்டு நீங்கப் பெறாதவளாய்
எழுச்சி கொண்டு, திருமகனின் ஆர்வத்தை உணர்ந்து, பாங்கான யாழ்
தன் நரம்புகள் இளகித் துன்ப ஒலி எழுப்பி ஏங்கினாற் போலத் தானும்
ஏங்கி, பின்வருமாறு சொல்லலானாள் :
பாங்கு + யாழ்
- பாங்கியாழ்; யகரம் வரக் குற்றுகரம் இகரமாயிற்று.
45 |
நாத னோதிய
நன்மறை நாகமேற்
சாத வாரணச் சாகியென் கோவியா
னாத னாயின பூம்பொழி லாங்குள
தேத மீருயிரிச் சாகியென் கோவியான். |
|
"நாதன் ஓதிய
நல் மறை நாகம் மேல்
சாத ஆரணச் சாகி என்கோ யான்?
ஆதன் ஆயின பூம் பொழில் ஆங்கு உளது,
ஏதம் ஈர் உயிர்ச் சாகி என்கோ யான்? |
"அம்மரத்தை
நான் ஆண்டவன் நல்ல வேதத்தை ஒதித் தந்த மலை
மேலுள்ள உண்மையான வேத மரம் என்பேனோ? ஆதன் என்னும் ஆதி
மனிதன் அமைந்திருந்த பூஞ்சோலையிடத்து உள்ளதாகிய, சாவுத் துன்பத்தை
அரிந்தொழிக்கும் உயிர் தரும் மருந்து என்பேனோ?
|